எதையும் எதிர்பார்க்காமல் உதவிய ஆட்டோ ஓட்டுநர்.. 30 ஆண்டுகளுக்கு பின் கடனை அடைத்த நபர்.. நெகிழ்ச்சி சம்பவம்
கேரளாவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு, 100 ரூபாய் கடன்பட்டிருந்த ஆட்டோ ஓட்டுநரை கண்டுபிடித்து, ஒருவர் தனது கடனை அடைத்த சம்பவம் நெகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட எஸ்.ஆர்.அஜித் 30 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு ஒரு பெரிய உதவியைச் செய்த ஆட்டோ ஓட்டுநரை கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. ஒருவழியாக அஜித் தனது முயற்சியில் சமீபத்தில் வெற்றி பெற்றார். ஆம். அஜித் சந்திக்க சென்றது கோலஞ்சேரி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாபுவை தான். ஒரு நாள் காலை தனது வீட்டிற்கு வெளியே அஜித்தைக் கண்டு பாபு ஆச்சரியப்பட்டார் என்று கேரளாவை சேர்ந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொச்சி நேவல் பேஸ் கேத்ரியா அகாடமியின் ஆசிரியர் அஜித், பாபுவிடம் யார் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று கேட்டுள்ளார். ஆனால் முன்னறிவிப்பில்லாமல் வந்த விருந்தினரை அடையாளம் காணத் தவறிய பாபுவுக்கு, 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பழைய கதையை அஜித் நினைவுப்படுத்தினார்.
அது என்ன ஃப்ளாஷ்பேக்?
அது 1993 ஆம் ஆண்டு. அஜித், சங்கனாச்சேரி நகரில் இளங்கலை கல்வி (பி எட்) மாணவராக இருந்தார். மங்களத்துநாடாவில் வகுப்பு தோழர் ஒருவரை சென்று பார்த்துவிட்டு, அஜித் இரவு மூவாட்டுபுழாவுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். இருப்பினும், அவர் பேருந்தை தவறவிட்டார். ஏற்கனவே தனது நண்பரின் வீட்டிலிருந்து சிறிது தூரம் பயணம் செய்தார்.
எனினும் அஜித்திடம் பேருந்துக் கட்டணத்தைத் தவிர பணம் இல்லாததால், ஓட்டுநர்களிடம் உதவி கேட்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. இந்த சூழலில் பாபுவின் ஆட்டோ வந்ததும், தன் நிலைமையை விளக்கி, பணத்தைத் திருப்பித் தருவதாக வாக்களித்தார். பாபு அஜித்தை மூவாட்டுழாவிற்கு அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டார். அது 10-கிலோமீட்டர் நீளமான இரவுப் பயணமாக அது இருந்தது.
எனினும் கருணை உள்ளம் கொண்ட ஆட்டோ ஓட்டுநரான பாபுவையும், அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தையும் அவர் மறக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பாபுவின் வீட்டை கண்டுபிடிக்க அவருக்கு பல ஆண்டுகள் ஆனது. ஒரு வழியாக சமீபத்தில் அவரை கண்டுபிடித்துவிட்டார்.
பாபுவை சந்தித்து விடைபெறுவதற்கு முன்னதாக, பாபுவிடம் ஒரு சிறிய கவரைக் கொடுத்த அஜித், தான் போவதற்கு முன்பு அதை திறக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். அந்த அட்டையில் ரூ.10,000 இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித் பாபுவுக்கு செலுத்த வேண்டிய பணம் நூறு மடங்கு அதிகரித்தது. எனினும் அந்த பணத்தை வாங்க பாபு மறுத்ததாகவும், அஜீத்தின் கட்டாயத்தின் பேரில் அவர் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. எந்த ஒரு கருணை செயலும் வீணாகாது என்பதற்கு சான்றாக இச்சம்பவம் நடந்துள்ளது என்பதற்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.