அஸ்ஸாமில் 16 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்து கருவுறச் செய்த தந்தை, 11 மாத தலைமறைவுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண், சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிலம் காச்சார் மாவட்டத்தில், 11 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த நபர் (41), தனது 16 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்து, அதன் மூலம் அவர் கருவுற்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரின் உதவியுடன் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிச்சத்துக்கு வந்த கொடூரச் சம்பவம்
இச்சம்பவம் 2022ஆம் ஆண்டு நடந்திருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண், தனது தந்தை மீது சென்ற ஜனவரி மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நடந்ததைப் பற்றி யாரிடமாவது வாய் திறந்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாவும் அதனால் இத்தனை நாட்களாக மௌனம் காத்து வந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
புகாரின்படி, அந்தப் பெண் தனது தந்தையால் பல சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதன் விளைவாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் கருவுற்றார். ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தபோது, உடல்நிலை மோசமடைந்ததால், பாதிக்கப்பட்ட பெண் தனது அத்தையிடம் இந்த விவரங்களைக் கூறி அழுதுள்ளார்.
உறவினர்கள் இது குறித்துக் குற்றம் சாட்டப்பட்ட தந்தையிடம் பேசியபோது, அவர் மகளை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். பின்னர் மகளை சில்சாரில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
சில வாரங்களுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பெண் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அக்குழந்தை தற்காலிகமாக உறவினர்களின் பராமரிப்பில் விடப்பட்டது.
தலைமறைவான தந்தை
இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட அந்தத் தந்தை வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இரண்டாவது மனைவி (பாதிக்கப்பட்ட பெண்ணின் சித்தி) அந்தப் பெண்ணைத் தங்கள் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார்.
காவல்துறை புகாரின்படி, அந்தப் பெண் ஒருமுறை தற்கொலைக்கும் முயன்றுள்ளார். ஆனால், தனக்குப் பிறந்த குழந்தையை நினைத்து அந்த முயற்சியைக் கைவிட்டுள்ளார். பின்னர் அவர் கௌகாத்திக்குச் செல்லும் ரயிலில் ஏறியபோது உடல்நிலை சரியில்லாமல் போகவே, ரயில்வே காவல்துறையினரால் மீட்கப்பட்டார். பின்னர் சில்சாரில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற காப்பகத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி, பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் உதவி மையத்தின் (Child Helpline) உதவியுடன் தனது தந்தைக்கு எதிராகப் புகார் அளித்தார். தன்னைப் பற்றி யாரிடமாவது கூறினால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தந்தை மிரட்டியதாகப் பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 11 மாதங்களாகத் தேடப்பட்டு வந்த அந்த நபர், திங்கள்கிழமை இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
