கோவா சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பாஜகவும், காங்கிரசும் மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவா மாநிலத்தில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் 2027ம் ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கோவா தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி தனித்து போட்டி

காங்கிரசும், ஆம் ஆத்மியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கெஜ்ரிவாலின் அறிவிப்பு காங்கிரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு கோவாவின் மாம் சட்டமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய கெஜ்ரிவால், கோவாவில் பாஜகவும், காங்கிரசும் ரகசிய கூட்டணி வைத்துள்ளதாகவும், காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் அது நேரடியாக பாஜகவுக்கு 40 எம்.எல்.ஏ.க்களை வழங்குவது போலாகி விடும் என்று கடுமையாக குற்றம்சாட்டினார்.

மக்கள் பணத்தை கொள்ளையடிக்கின்றனர்

இது தொடர்பாக பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ''கோவாவில் ஆளும் கட்சியான பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரசும் இணைந்து மக்கள் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். பா.ஜ.க எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி அல்லது காங்கிரஸ் இருந்தாலும் சரி, அவர்கள் கூட்டாக வணிகங்களை நடத்துகிறார்கள். இதற்கு எதிராக நீங்கள் [மக்கள்] குரல் எழுப்பினால் தாக்கப்படுவீர்கள், மேலும் அடியாட்கள் அனுப்பப்பட்டு மிரட்டப்படுவீர்கள். வரும் தேர்தலில் இது மாற வேண்டும். கோவாவின் வளங்களின் மீது யாருக்கு உரிமை இருக்க வேண்டும்? மக்களுக்கா அல்லது இந்தக் குடும்பங்களுக்கா?'' என்று தெரிவித்தார்.

நில உரிமைகளை பறிக்கின்றனர்

''கோவாவில் காடுகள், ஆறுகள், சுரங்கங்கள் உள்ளன. உங்கள் குழந்தைகள் இந்த வளங்களால் பயனடைய வேண்டும். இந்த வளங்களைக் கொண்டு பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சாலைகளுக்கு நிதி அளிக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக, பாஜகவும், காங்கிரசும் இந்த வளங்களை கொள்ளையடித்து அந்தப் பணத்தை ஸ்விஸ் வங்கிகளில் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் உங்கள் நில உரிமைகளைப் பறித்துவிட்டு, தங்கள் குடுபத்தை சேர்ந்தவர்களையே தேர்தலில் போட்டியிட வைக்கின்றனர். இந்த நிலையை நீங்கள் மாற்ற வேண்டும். ஆம் ஆத்மி என்றென்றும் மக்களின் உரிமைக்களுக்காக போராடும்'' என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.