மகாத்மா காந்தியையப் பற்றி அவதூறகப் பேசிய பாஜக எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் காங்கிரஸ் கட்சி காட்டமாகத் தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் உத்தர கண்டன தொகுதி பாஜக எம்.பி.யுமான அனந்தகுமார் ஹெக்டே பேசுகையில், "மகாத்மா காந்தி நடத்திய சுதந்திரப் போராட்டம் ஒரு நாடகம். ஒட்டுமொத்த சுதந்திரப் போராட்டம் முழுவதுமே, ஆங்கிலேயர்களின் அனுமதியுடன், ஆதரவுடன் நடத்தப்பட்டது. தலைவர்கள் என அழைக்கப்படக் கூடியவர்கள் யாரேனும் போலீஸாரால் ஒருமுறையாவது தாக்கப்பட்டு இருக்கிறார்களா? வரலாற்றைப் படிக்கும்போது என் ரத்தம் கொதிக்கிறது. எப்படி தேசத்தின் மகாத்மா எனும் அளவுக்கு உயர்ந்தார்கள்" என சர்ச்சையாகப் பேசியிருந்தார்.

பாஜக. எம்.பி. ஹெக்டே பேசிய பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான அனந்த சர்மா கூறுகையில், "நாட்டுக்காக ஏராளமான தியாகங்களைச் செய்தவர்களையும், சுதந்திரப் போராட்ட இயக்கத்தையும் பாஜக எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே அவமானப்படுத்திவிட்டார். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவை பாஜக அரசும், பிரதமர் மோடியும் கொண்டாடுவது உண்மையாக இருந்தால், பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் வந்து தனது நிலைப்பாட்டைத் தெரிவித்து மன்னப்பு கேட்க வேண்டும். அனந்தகுமார் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்