குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவ அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்களும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்கலைக்கழகத்தில் இருந்து ராஜ்காட் வரை பேரணியாக சென்றனர். 

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை நோக்கி இளைஞர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த போராட்டக்காரர்கள் அலறிடித்துக்கொண்டு ஒடினர். அந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் காயமடைந்தார். பின்னர், அந்த நபர் துப்பாக்கியை காட்டி மிரட்டியவாறு கூச்சலிட்டுக் கொண்டே சென்றார். 

இவை அனைத்தும், அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் முன்னிலையிலேயே அரங்கேறியது. அங்கிருந்த பலரும் மர்ம நபரின் செயலை வீடியோ எடுத்தனர். மாணவர்கள் நோக்கி துப்பாக்கியுடன் சென்ற மர்ம நபரை போலீசார் சுற்றி வளைக்காமல் அமைதியாக இருந்தனர். இறுதியில் அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காயமடைந்த நபரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய ஜேஎன்யூ மாணவர்கள் மீது பயங்கர ஆயுதங்களால் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.