இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், கொரோனாவை தடுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஊரடங்கால் கொரோனாவிற்கு பயந்து அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோர் சுயநலமின்றி, உயிரை பணயம் வைத்து களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றிவருகின்றனர்.

மக்களின் நலனுக்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை மக்கள் சீரியஸாக பின்பற்றுவதை உறுதி செய்வதற்காகவும் மக்களின் பாதுகாப்புக்காகவும் காவல்துறையினரும் களத்தில் இறங்கி பணியாற்றிவருகின்றனர். கொரோனா அச்சத்தால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள வேளையில், தங்களுக்கு நோய் தொற்றிவிடுமோ என்ற பயமில்லாமல், மக்களுக்காக நாள் முழுக்க வெயிலில் நின்று பணியாற்றுகின்றனர் காவல்துறையினர்.

இந்நிலையில், ஆந்திர மாநில கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த துனி நகரில் வெயிலில் நின்று வேலை பார்த்து கொண்டிருந்த காவல்துறையினருக்கு, லோகமணி என்ற பெண், கூல்டிரிங்ஸ் வாங்கி கொடுத்துள்ளார். மாதம் வெறும் ரூ.3500 மட்டுமே சம்பாதிக்கும் அந்த பெண், காவல்துறையினர் வெயிலில் நின்று கால்கடுக்க மக்களுக்காக பணியாற்றுவதை கண்டு, தனது அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தும் விதமாக கூல்டிரிங்ஸ் வாங்கி கொடுத்துள்ளார். 

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, அந்த தகவல் ஆந்திரா காவல்துறை டிஜிபி கவுதம் சவாங்கிற்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த பெண்ணை நேரடியாக பாராட்ட விரும்பிய டிஜிபி சவாங், அந்த பெண்ணை கண்டறியுமாறு உத்தரவிட்டதையடுத்து, அவரை கண்டறிந்த போலீஸார், டிஜிபியுடன் வீடியோ காலில் பேசவைத்தனர். 

அப்போது, வீடியோ காலில் அந்த பெண்ணுடன் பேசிய டிஜிபி கவுதம் சவாங், அவரது தாய்மை உள்ளம் படைத்த செயலை வெகுவாக பாராட்டினார். ஒரு மாநிலத்தின் காவல்துறை தலைவரான டிஜிபி, அந்த கர்வமெல்லாம் இல்லாமல், அந்த பெண்ணின் நல்ல மனதை பாராட்டும் வகையில், அவருக்கு சல்யூட் அடித்து பாராட்டு தெரிவித்தார். அந்த வீடியோ இதோ..