700 முதல் 800 ரூபாய்க்குள் மின்கட்டணம் செலுத்தவேண்டிய முதியவர் ஒருவருக்கு 128 கோடி ரூபாய்க்கு மின் கட்டண ரசீது அனுப்பு உத்தரப்பிரதேசமாநில மின்வாரியம்  ஷாக் அளித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஹப்பூர் நகரை அடுத்த சாம்ரி கிராமப் பகுதியில் ஷமீம் என்ற முதியவர், தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது சிறிய வீட்டிற்கு பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்காக, 128 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 444 ரூபாய் கட்டணமாக செலுத்தக் கோரி ரசீது அனுப்பப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து மின்வாரிய அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்க சென்ற அவரிடம்,’அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ரசீதில் உள்ளபடி  கட்டணத்தைச செலுத்தியே ஆக வேண்டும்’ எனக் கூறி அதிகாரிகளும் அதிர்ச்சியளித்துள்ளனர்.

உடனே அக்கம்பக்கத்தினர் கொடுத்த ஆலோசனையின்படி பத்திரிகையாளர்களுக்கு தனது பிரச்சினை குறித்து பேசிய பெரியவர்  கட்டணத்தை செலுத்தாததால் தனது வீட்டிற்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டணத்தை செலுத்தும் வரை மின் இணைப்பு வழங்கப்படமாட்டாது என அதிகாரிகள் கூறியதாகவும் வேதனையுடன்  தெரிவித்துள்ளார். மேலும் வழக்கமாக 700 முதல் 800 ரூபாய் வரை மட்டுமே மின் கட்டணமாக வரும் எனவும், ஆனால் தற்போது மொத்த ஹப்பூர் நகருக்கான மின்கட்டணத்தையும் தன்னை செலுத்துமாறு கூறி ரசீது அனுப்பப்பட்டிருப்பதாகவும் அந்த முதியவர் தெரிவித்துள்ளார்.

செய்தி பத்திரிகைகளில் வெளிவரவே நடந்த தவறைப் புரிந்துகொண்ட மின்வாரியம் தற்போது, தொழில் நுட்பக்கோளாறு காரணமாக அத்தகைய தவறு நிகழ்ந்துவிட்டதாகவும், பெரியவருக்கு வேறு ரசீது அளித்து அவருக்கு மின் இணைப்பு கொடுக்க முன்வந்துள்ளது.