காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் கைது! அசாம் சிறையில் அடைக்க ஏற்பாடு!
வாரிஸ் பஞ்சாப் டி தலைவர் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டதை அடுத்து விமானம் மூலம் அசாம் கொண்டுசெல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
பஞ்சாபின் மோகாவில் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பான வாரிஸ் பஞ்சாப் டி தலைவர் அம்ரித்பால் சிங் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போடப்பட்ட வாரண்ட் மூலம் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை கூறியுள்ளது.
மார்ச் 18 அன்று தொடங்கிய பஞ்சாப் காவல்துறையின் அடக்குமுறைக்குப் பிறகு அம்ரித்பால் சிங்குக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனால், காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் அம்ரித் பால் காவல்துறையினரை ஏமாற்றி பஞ்சாப் மாநிலத்தில் இருந்து தப்பி ஓடினார்.
"அம்ரித்பால் சிங் இன்று காலை 6.45 மணியளவில் பஞ்சாப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்" என்று பஞ்சாப் ஐஜிபி சுக்செயின் சிங் கில் கூறுகிறார்.
கடந்த மாதம், தப்பியோடிய அம்ரித்பாலுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் உள்ள தொடர்பு குறித்து காவல்துறைக்கு வலுவான சந்தேகம் எழுந்தது. அம்ரித்பால் சிங் தனது சொந்த இராணுவமான ஆனந்த்பூர் கல்சா படை மற்றும் காலிஸ்தான் புலிப் படைக்கு ஐஎஸ்ஐ மூலம் பயிற்சி அளிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அம்ரித் பால் சிங்குக்கு வெளிநாட்டு நிதியும் கிடைத்து வருவதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அம்ரித் பால் சிங் அசாமில் உள்ள திப்ருகர் மத்திய சிறைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பாபால்பிரீத் சிங் உட்பட அவரது மற்ற நெருங்கிய கூட்டாளிகள் 8 பேருடன் அடைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்ரித்பால் சிங் தேசியப் பாதுகாப்புச் சட்டம் மூலம் குறைந்தது பன்னிரண்டு மாதங்கள் காவலில் வைக்கப்படலாம். அவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்காமல் பத்து நாட்கள் காவலில் வைக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது.
பிப்ரவரி 23 அன்று அஜ்னாலா காவல் நிலையத்தைத் தாக்கிய பின்னர், அம்ரித்பால் மீதும் அவரது கூட்டாளிகள் மீதும் கொலை முயற்சி, காவல்துறை அதிகாரிகளைத் தாக்குதல் மற்றும் அரசு ஊழியர்களின் சட்டப்பூர்வ பணியை தடுத்தல் ஆகிய குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அவரது கூட்டாளிகளிடம் இருந்து ஏராளமான துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.