டெல்லியில் பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலும், 11-ம்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரங்கள் களத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. 28 அம்சங்கள் அடங்கிய இந்த கேரண்டி கார்டை டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வெளியிட்டார்.

இந்த தேர்தல் அறிக்கையில், ரேஷன் பொருட்கள் வீடு தேடி விநியோகம், 10 லட்சம் மூத்த குடிமக்களுக்கு இலவச புனித யாத்திரை மற்றும் பணியில் இருக்கும்போது இறக்கும் துப்புரவுத் தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படும், சுத்தமான குடிநீர், தரமான கல்வி , 24 மணி நேரம் சந்தைகள் செயல்பட அனுமதி வழங்குவதும் இந்த வாக்குறுதியில் இடம்பெற்றுள்ளது.

முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “நாளை பகல் 1 மணி வரை பாஜகவுக்கு நேரம் தருகிறோம். அதற்குள் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை அவர்கள் அறிவிக்கட்டும். அப்படி அதற்குள் முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டால், அவருடன் விவாதிக்க நான் தயார் முதல்வர் வேட்பாளரை பாஜக அறிவிக்க வேண்டும் என ெடல்லி மக்கள் விரும்புகின்றனர்” என்று தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், “ கேஜ்ரிவால் எங்களை முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்படி கூறியிருக்கிறார். மேலும், விவாதம் நடத்தத் தயார் என்றும் தெரிவித்துள்ளார். இதற்காக முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. நேரத்தையும், இடத்தையும் சொன்னால்போதும். பாஜக உறுப்பினர்கள் அங்கு விவாதிக்க வருவார்கள். முதல்வரைப் பொருத்தவரை ெடல்லி மக்கள்தான் எங்கள் முதல்வர்" எனத் தெரிவி்த்தார்