அயோத்தி ராமர் கோயில் போலி பிரசாதம்.. அமேசான் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்..
அமேசான் தளத்தில் அயோத்தி ராமர் கோயில் பிரசாதன் என்ற பெயரில் இனிப்புகள் விற்பனைக்கு பட்டிலிடப்பட்டிருப்பது தொடர்பாக அந்நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி பிரம்மானடமாக நடைபெற உள்ளது. அன்றைய தினமே கோயில் கருவறையில் குழந்தை ராமர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த பிரம்மாண்ட விழாவில் நாட்டின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனிடையே ராமர் கோயில் திறப்பு விழா தொடர்பாக பல்வேறு மோசடிகளும் நடந்து வருகின்றன. அந்த வகையில் அமேசான் ஆன்லைன் தளத்தில் அயோத்தி ராமர் கோயில் பிரசாதம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு பிரசாதம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் அளித்தது.
இந்த நிலையில், இந்த புகாரின் அடிப்பையில், அமேசான் நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 7 நாட்களுக்குள் அமேசான் நிறுவனம் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளது. அப்படி பதிலளிக்க தவறும் பட்சத்தில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 இன் விதிகளின் கீழ் நிறுவனத்திற்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது..
அமேசானில் “ஸ்ரீ ராமர் கோயில் அயோத்தி பிரசாதம் என்ற பெயரில் பல்வேறு இனிப்புகள்/உணவு பொருட்கள் விற்பனைக்கு இருப்பதை அதிகாரிகள் கவனித்ததாக நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பொருட்கள் நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாகவும், அதனை நம்பி பலர் ஏமாறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் “ குறிப்பாக அயோத்தி ராமர் கோயில் நெய் லட்டு, பால் பேடா போன்ற இனிப்புகள் விற்பனைக்கு கிடைக்கிறது. இது நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்) விதிகள், 2020 இன் விதி 4(3) இன் கீழ், எந்தவொரு மின்வணிக நிறுவனமும் எந்தவொரு நியாயமற்ற வர்த்தக நடைமுறையையும் கடைப்பிடிக்கக் கூடாது
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், இதுபோன்ற தயாரிப்பு அல்லது சேவையை 'தவறான விளம்பரங்களை' தடை செய்கிறது; அல்லது அத்தகைய தயாரிப்பு அல்லது சேவையின் தன்மை, பொருள், அளவு அல்லது தரம் குறித்து நுகர்வோரை தவறாக வழிநடத்தும் அல்லது தவறான உத்தரவாதத்தை அளிக்கிறது.” நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவில்: யாரும் கண்டிராத புகைப்படங்கள்.. பிரத்யேக க்ளிக்ஸ் !!
இதனிடையே அமேசான் நிறுவனம் தங்கள் கொள்கைகளின்படி "தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சில விற்பனையாளர் மூலம் தவறான பெயரில் விற்கப்படும் பொருட்கள் தொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திடம் (CCPA) இருந்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. எங்கள் கொள்கைகளின்படி இதுபோன்ற புகார்களுக்க்கு எதிராக நாங்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளது.