வட இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல்வாதியும், மாநிலங்களவை உறுப்பினருமான அமர்சிங்கும் உடல்நல்குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர், அமர்சிங் (64). உத்தரபிரதேச மாநிலத்தில், ராஜபுத்திர குடும்பத்தில் பிறந்தவர். அமர் சிங் 1996 ல் உத்தரப்பிரதேசத்தில் இருந்து முதன்முறையாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், அந்த கட்சியின் தலைவர் முலாயம் சிங்குக்கு மிகவும் நெருக்கமாகவும் திகழ்ந்தார். பின்னர் கட்சி விரோத நடவடிக்கைகளால், அந்த கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஆனால், 2016-ம் ஆண்டு, உத்தரபிரதேசத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு நடந்த தேர்தலில், அந்த கட்சியின் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு தேர்வாகி எம்.பி.யாக இருந்து வந்தார். அவர் 2011-ம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதில் இருந்து அவ்வப்போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். கடந்த மார்ச் மாதம் அவர் சிங்கப்பூர் சென்று அங்குள்ள  மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு 3 மணிநேர முன்னர் இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தும், சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் நினைவு நாளையொட்டி அவருக்கு புகழாரம் செலுத்தியும் டுவிட்டரில் பதிவுகள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இவருக்கு, பங்கஜா என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். அவரது மறைவுக்கு பிரதர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.