akilesh mulayam crisis begin again
சமாஜ்வாதி கட்சியில் மீண்டும் அகிலேஷ்யாதவ், அவரின் தந்தை முலாயம் சிங்யாதவ் ஆகியோருக்கு இடையே மீண்டும் மோதல் தொடங்கி இருப்பதால், நாளை நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுக்கள் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமாஜ்வாதிக் கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தலைமையில் ஒரு பிரிவாகவும், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையில் ஒருபிரிவாகவும் செயல்பட்டு வருகிறது.
இதில், அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இதனால், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட மீரா குமாருக்குதான் தனது ஆதரவு என அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். மேலும், தனது கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் மீரா குமாருக்கே ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேசமயம், தலைவர் முலாயம் சிங் யாதவ், பா.ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ராம் நாத் கோவிந்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இதனால், தனது சகோதரர் சிவபால் யாதவை ராம் நாத் கோவிந்துக்கு ஆதரவாக வாக்களிக்க கோரியுள்ளார். இதனால், சமாஜ்வாதிக் கட்சியின் ஓட்டுக்கள் ஜனாதிபதி தேர்தலில் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்த சமாஜ்வாதிக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி கூறுகையில், “ தலைவர் அகிலேஷ் யாதவ் அனைத்து எம்.எல்.ஏ.க்களிடம்எதிர்க்கட்சி வேட்பாளர் மீரா குமாருக்கு வாக்களிக்க உத்தரவிட்டுள்ளார். லக்னோ வந்திருந்த வேட்பாளர் மீரா குமார், அகிலேஷ் யாதவையும், எம்.எல்.ஏ.க்களையும்சந்தித்து ஆதரவு கோரினார். ஆதலால் அனைவரும் மீரா குமாருக்கே வாக்களிப்பார்கள்’’ எனத் தெரிவித்தார்.
இது புறம்இருக்க, அகிலேஷின் சித்தப்பா சிவபால் யாதவின் ஆதரவாளர் தீபக்மிஸ்ரா கூறுகையில், “ நாங்கள் பா.ஜனதா கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர்ராம்நாத் கோவிந்துக்கே எங்களது ஆதரவைத் தெரிவிப்போம். ராம்நாத் கோவிந்தை தேர்வு செய்த பிரதமர் மோடிக்கு நன்றிதெரிவிக்கிறோம்’’ என்றார்.
பா.ஜனதா கூட்டணி சார்பாக ராம் நாத் கோவிந்த வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங், தனது ஆதரவைத் தெரிவித்து, வலிமையான வேட்பாளர் என பாராட்டு தெரிவித்தார்.
மேலும், சிவபால் யாதவ் கூறுகையில், “ எனது சகோதரர் முலாயம் சிங் என்ன கூறுகிறாரோ, நினைக்கிறாரோ அது நடக்கும். ஆதலால், ராம் நாத் கோவிந்துக்கே எனது ஆதரவு’’ என்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நாளை நடக்க இருக்கும் நிலையில், சமாஜ்வாதிக் கட்சியினர் இரு பிரிவுகளாக பிளவு பட்டு இருப்பதால், ஓட்டு பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளது.
