தேசியவாத காங்கிரஸ் கட்சியும், சின்னமும் எங்களுக்குத்தான் சொந்தம்; தேர்தல் ஆணையம் கதவைத் தட்டிய அஜித் பவார்!!

தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக் கொண்டு பாஜக, சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராகி இருக்கும் அஜித் பவார் தற்போது கட்சியும், சின்னமும்  தனக்குத் தான் சொந்தம் என்று தேர்தல் ஆணையத்தில் கடிதம் கொடுத்து இருக்கிறார்.

Ajit Pawar stake claims Sharad Pawar NCP and symbol

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை திடீரென அரசியல் மாற்றம் ஏற்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான அஜித் பவார் (கட்சி நிறுவனரும், தலைவருமான சரத் பவாரின் அண்ணன் மகன்) திடீரென ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் சேர்ந்தார். துணை முதல்வருமானார். இவருடன் சென்ற எம்எல்ஏக்களில் இவருடன் சேர்த்து ஒன்பது பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், இன்னும் இலாகா யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. 

இந்த நிலையில் இன்று தனக்கு 40 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறி, அவர்களது ஆதரவுக்  கடிதங்களுடன் தேர்தல் ஆணையத்தில் தனக்குத் தான் கட்சியும், சின்னமும் சேரும் என்று உரிமை கோரி இருக்கிறார் அஜித் பவார். அதற்கு முன்னதாக இதுதொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கும் முன்பு தங்களை கலந்தாலோசிக்க வேண்டும் என்று சரத் பவார் பிரிவும் தேர்தல் ஆணையத்தில் கேவியட் மனு தாக்கல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் இருதரப்பினரையும் தொடர்புடைய ஆவணங்களை சமர்பிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொள்ளும் என்று தெரிய வந்துள்ளது.

Ajit Pawar stake claims Sharad Pawar NCP and symbol

முன்னதாக இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இருபிரிவினரும் கூட்டம் நடத்தி இருந்தனர். அஜித் பவார் கூட்டிய கூட்டத்தில் மொத்தமுள்ள 53 எம்எல்ஏக்களில் 31 பேர் கலந்து கொண்டதாகவும், சரத் பவார் கூட்டிய கூட்டத்தில் 10 பேர் மட்டுமே கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான பிரபுல் பட்டேல், சஹஜன் புஜ்பால், திலீப் வால்ஸ் பாட்டீல் ஆகியோர் அஜித் பவார் தரப்பில் உள்ளனர். இது அந்தப் பிரிவுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அஜித் பவாருடன் வெளியேறியவுடன் கட்சியில் இருந்து பிரபுல் பட்டேல் மற்றும் எம்பி சுனில் தத்கரே இருவரையும் சரத் பவார் நீக்கி இருந்தார். சரத் பவாருக்கு வலது கரமாக இருந்தவர் பிரபுல் பட்டேல். இவர் அஜித் பவாருடன் இணைந்து இருப்பது சரத் பவாருக்கு சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது. 

ராஜ்யசபா எம்பியான பிரபுல் படேல், பவாரின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து, கடந்த மாதம் என்சிபியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். பவாருடன் இணைந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்தார். இரண்டு எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சரத் பவாரின் மகளும், எம்பியுமான சுப்ரியா சுலே சரத் பவாருக்கு கடிதம் எழுதி இருந்தார். 

பிரபுல் பட்டேல் மற்றும் சுனில் தத்கரேவுக்கு அனுப்பி இருந்த கடிதத்தில், ''தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியை தானாக முன்வந்து விட்டுக் கொடுப்பீர்கள் என்பதை கருத்தில் கொண்டு, கட்சியின் உறுப்பினர் பதிவேட்டில் இருந்து உங்களது பெயர்களை முறையாக நீக்குகிறேன்" என்று கூறப்பட்டு இருந்தது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios