பலத்தை காட்டிய சரத் பவார்: வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக போராட அழைப்பு!
வகுப்புவாத பிளவை உருவாக்கும் சக்திகளுக்கு எதிராக போராட வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்
மகாராஷ்டிராவிலும் நாட்டிலும் வகுப்புவாத பிளவை உருவாக்கும் சக்திகளுக்கு எதிராக போராட வேண்டிய அவசியம் உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசாங்கத்தில் துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், மும்பை அருகே காரத்தில், அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் உரையாற்றிய சரத் பவார், “ தங்களுக்கு எதிரான கட்சிகளை உடைக்கும் பாஜகவின் தந்திரங்களுக்கு நமது கட்சியில் சிலர் இரையாகி விட்டனர்.” என்றார்.
மகாராஷ்டிரா அரசியல்: சரத் பவாருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!
மகாராஷ்டிராவிலும் நாட்டிலும் வகுப்புவாத பிளவை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அமைதியை விரும்பும் குடிமக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கும் சக்திகளை எதிர்த்து நாம் போராட வேண்டும் என்றும், நாட்டின் ஜனநாயகத்தை நாம் பாதுகாக்க வேண்டும் என்றும் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
காரத்தில் உள்ள தனது வழிகாட்டியும் மகாராஷ்டிராவின் முதல் முதலமைச்சருமான யஷ்வந்த்ராவ் சவானின் நினைவிடத்திற்குச் சென்று மலர் தூவி சரத் பவார் மரியாதை செலுத்தினார். குரு பூர்ணிமாவை முன்னிட்டு மறைந்த யஷ்வந்த்ராவ் சவானின் நினைவிடமான 'பிரிதிசங்கத்திற்கு' சென்று சரத பவார் மரியாதை செலுத்தினார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் உள்ள 53 எம்.எல்.ஏ.க்களில் 40 பேரின் ஆதரவு அஜித் பவாருக்கு இருப்பதாக கூறப்படும் நிலையில், சரத் பவாரின் இந்த நடவடிக்கை அவரது வலிமையைக் காட்டுவதாக பார்க்கப்படுகிறது.
அஜித் பவாரின் கிளர்ச்சியை கண்டு தான் தயங்க மாட்டேன் எனவும், மக்கள் மத்தியில் செல்வதன் மூலம் மீண்டும் புதிதாக ஆரம்பிப்பேன் எனவும் சரத் பவார் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இன்று காலை புனேயில் இருந்து கராத் நகருக்கு சென்ற சரத் பவாருக்கு வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். கராத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், என்சிபி தொண்டர்கள் அவருக்கு வரவேற்பளித்தனர். மூத்த காங்கிரஸ் தலைவர் பிருத்விராஜ் சவானும் அவருடன் அப்போது உடனிருந்தார்.