மகாராஷ்டிரா அரசியல்: சரத் பவாருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாருடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அவருக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்
பாஜகவை மத்தியில் ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், கடந்த மாதம் பாட்னாவின் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், பாஜகவை வீழ்த்த அனைவரும் ஒத்துழைப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூருவில் நடைபெறவுள்ளது.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் மேற்கொண்டு வந்தார். ஆனால், சில காரணங்களால் அவரால் அது இயலாமல் போனதையடுத்து, அந்த பணிகளை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மேற்கொண்டு வருகிறார். இருப்பினும், இந்த பணிகளில் நாட்டின் மூத்த அரசியல் தலைவரான சரத் பவாரின் பங்கு கணிசமாக உள்ளது.
இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார், பாஜக - சிவசேனா கூட்டணியில் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து துணை முதல்வராகியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 53 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் நிலையில், அஜித் பவாருக்கு 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கட்சியை கைப்பற்றுவதில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவுக்கும், சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக, அஜித் பவார் கட்சியை உடைத்ததாக தெரிகிறது. ஆனால், அஜித் பவார் மற்றும் அவருடன் அமைச்சர்களாக பதவியேற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்ததில் பாஜகவுக்கு முக்கிய பங்கிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. பிரதமர் மோடி, ஊழல் குற்றச்சாட்டுகளை யார் மீது முன்வைத்தாரோ அவர்கள் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளனர். இப்போது அவர்கள் தூயவர்களாகி விட்டார்கள் என எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், சரத் பவாருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். சரத் பவாருடன் தொலைபேசி வாயிலாக பேசிய முதல்வர் ஸ்டாலின், மகாராஷ்டிராவில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலையில் சரத் பவாருக்கு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.
பாஜகவுடன் கைகோர்த்த என்சிபி தலைவருக்கு பதவியா? பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்
முன்னதாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருடன் தொலைபேசியில் பேசி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிட மகா விகாஸ் அகாடி கூட்டணியின் பலவீனம், தேசிய அளவில் வலிமையான எதிர்க்கட்சிகளின் கூட்டணி மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சரத் பவாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அஜித் பவார் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள சரத் பவார், “இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. 1980ல் நான் தலைமை வகித்த கட்சியில் 58 எம்எல்ஏக்கள் இருந்தனர், பின்னர் அனைவரும் வெளியேறி 6 எம்எல்ஏக்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். ஆனால் நான் எண்ணிக்கையை பலப்படுத்தினேன், என்னை விட்டு சென்றவர்கள் தங்கள் தொகுதிகளில் தோற்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.