அகமதாபாத் விமான விபத்தில் காயமடைந்த மற்றும் அதிர்ச்சியடைந்த விலங்குகளுக்கு தர்சனா உதவி வருகிறது. தீ விபத்தில் பல விலங்குகள் உயிரிழந்த நிலையில், தர்சனா பல நாய்கள் மற்றும் பறவைகளை மீட்டு சிகிச்சை அளித்து வருகிறது.
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் காயமடைந்த மற்றும் அதிர்ச்சியடைந்த விலங்குகளைக் காப்பாற்றும் முயற்சியில், தர்சனா என்ற விலங்குகள் நல அமைப்பு களமிறங்கியுள்ளது.
தர்சனா அமைப்பின் நிறுவனர் ஆகாஷ் சாவ்தா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், விமான விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் 6 முதல் 7 நாய்களும், 50-க்கும் மேற்பட்ட பறவைகளும் உயிரிழந்ததாகத் தெரிவித்தார். அதேசமயம், அவரது குழு 3-4 நாய்களையும், 6-7 பறவைகளையும் காப்பாற்றியது என்றார். மீட்கப்பட்ட பறவைகளும் விலங்குகளும் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றன என்றும் கூறினார்.
அதிர்ச்சி அடைந்த விலங்குகள், பறவைகள்:
உயிர் பிழைத்த விலங்குகள், அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில், அவற்றுக்கு உணவு மற்றும் மல்டிவைட்டமின்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விபத்தில் தங்களின் பராமரிப்பாளர்களை இழந்த வீடற்ற விலங்குகளுக்கு அவசரகால உதவிகளை ஏற்பாடு செய்வதற்காக, தர்சனா குழுவினர் அயராது உழைத்து வருகின்றனர்.
"எங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம் காயமடைந்த, நோய்வாய்ப்பட்ட அல்லது விபத்துக்குள்ளான விலங்குகளை மீட்பதில் ஈடுபட்டுள்ளது. நாங்கள் அத்தகைய விலங்குகளை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கிறோம். நேற்று இங்கு விமானம் விபத்துக்குள்ளானபோது, பல விலங்குகள் மற்றும் பறவைகள் இங்கு வாழ்ந்து வந்தன என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்... எங்கள் குழு ஆம்புலன்ஸுடன் இங்கு வந்தோம்." என்கிறார் ஆகாஷ் சாவ்தா.
50 க்கும் மேற்பட்ட பறவைகள்:
"தீவிபத்தில் 6-7 நாய்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்ததை நாங்கள் கண்டோம். நாங்கள் 3-4 நாய்களை மீட்டோம், அவை நலமாக உள்ளன, ஆனால் அதிர்ச்சியால் சாப்பிடத் தொடங்கவில்லை. அவற்றுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்க முயற்சி செய்கிறோம். நாங்கள் 6-7 பறவைகளையும் மீட்டோம், அவை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளன. நேற்று மாலை 3 மணி முதல் நள்ளிரவு வரை நாங்கள் இங்குதான் இருந்தோம்," என்று அவர் மேலும் கூறினார்.
சம்பவ இடத்திற்குச் சென்றபோது, பெரிய தீ விபத்தில் எரிந்த வாகனங்களைப் பார்த்ததாக சாவ்தா கூறினார். "இந்த நாய்கள் இந்தப் பகுதியிலேயே தங்கும். இவை உள்ளூர் நாய்கள்; இவை தீ விபத்தில் தங்கள் நண்பர்களையும், தங்களுக்கு உணவு அளித்தவர்களையும் இழந்துவிட்டன. நாங்கள் இப்போது அவற்றுக்கு பால் மற்றும் பிஸ்கட் ஏற்பாடு செய்துள்ளோம். எங்கள் ஆம்புலன்ஸ் அவற்றுக்கு உணவு மற்றும் மருந்துகளை வாங்கச் சென்றுள்ளது. ஆம்புலன்ஸ் திரும்பியவுடன், பசியுள்ள அனைத்து விலங்குகளுக்கும் உணவளிப்போம். மல்டிவைட்டமின் மாத்திரைகளையும் வழங்குவோம்," என்று அவர் தெரிவித்தார்.
