ஏர் இந்தியா விமான விபத்து: விசாரணையில் மத்திய அரசின் உயர்மட்ட குழு
அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்துக்குள்ளானதில் 241 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணங்களை ஆராய மத்திய அரசு உயர்மட்ட குழு அமைத்துள்ளது. இக்குழு மூன்று மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கும்.

விமான விபத்து: உயர்மட்ட குழு
அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு (லண்டன்) புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI-171, ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் குறைந்தது 241 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணங்களை ஆராய்வதற்காக, மத்திய அரசு ஒரு உயர்மட்ட, பன்முக ஒழுங்குமுறை கொண்ட குழுவை அமைத்துள்ளது.
இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், "அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு ஜூன் 12, 2025 அன்று புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்துக்குள்ளானதற்கான காரணங்களை ஆராய்வதற்காக ஒரு உயர்மட்ட, பன்முக ஒழுங்குமுறை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சம்பவங்களைத் தடுக்கவும், கையாளவும் தற்போதுள்ள நடைமுறைகள் (SOPs) மற்றும் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை இந்தக் குழு ஆய்வு செய்யும். மேலும், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்களைக் கையாள்வதற்கான விரிவான வழிகாட்டுதல்களைப் பரிந்துரைக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
3 மாதங்களில் அறிக்கை
"இக்குழுவிற்கு விமானத் தரவு, காக்பிட் குரல் பதிவுகள், விமானப் பராமரிப்புப் பதிவுகள், ஏடிசி பதிவுகள் மற்றும் சாட்சி வாக்குமூலங்கள் உள்ளிட்ட அனைத்து பதிவுகளையும் அணுகும் உரிமை உண்டு" என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழு தனது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் வெளியிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த குழுவுக்கு உள்துறை செயலாளர் தலைமை தாங்குவார் என்றும், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், இந்திய விமானப்படை மற்றும் விமானப் போக்குவரத்து நிபுணர்களின் பிரதிநிதிகள் இக்குழுவில் இடம் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு அமைக்கப்பட்டதன் நோக்கம், விபத்தின் மூல காரணத்தை கண்டறிவதே என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்களைத் தடுக்கத் தேவையான மேம்பாடுகளைப் பரிந்துரைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சம்பவங்களைத் தடுப்பது மற்றும் கையாளுவது தொடர்பான சர்வதேச தரத்திலான சிறந்த நடைமுறைகளையும் இக்குழு பரிந்துரை செய்யும்.
விசாரணை எப்படி நடக்கும்?
விமானப் போக்குவரத்து நிபுணர்கள், விபத்து புலனாய்வாளர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் உள்ளிட்ட பொருத்தமானதாகக் கருதும் வேறு எந்த உறுப்பினர்களையும் சேர்த்துக்கொள்ளும் அதிகாரமும் இந்தக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இக்குழு கள ஆய்வு நடத்தி, விமானப் பணியாளர்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் (ATCOs) மற்றும் தொடர்புடைய பணியாளர்களை நேர்காணல் செய்யும். வெளிநாட்டு நாட்டினர் அல்லது விமான உற்பத்தியாளர்கள் சம்பந்தப்பட்டிருந்தால், சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
டாடா குழுமம் அறிவிப்பு
டாடா குழுமம் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சார்பில் 1800 5691 444 என்ற பிரத்யேக பயணிகள் தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. இந்த எண்ணில் தொடர்புகொண்டு விமான விபத்து பற்றி கூடுதல் தகவல்களைப் பெறலாம் என்று கூறியுள்ளது. இந்தியாவுக்கு வெளியே இருந்து அழைப்பவர்கள் +91 8062779200 என்ற எண்ணை அழைக்கலாம்.
இந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் டாடா குழுமம் அறிவித்துள்ளது.