காங்கிரஸ் கட்சி சார்பில் அகமது படேல் மாநிலங்கள் அவை எம்.பி. ஆவது கடினம், அடுத்துவரும் நாட்களில் அதிகமான எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.க்கள்சவால் விட்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்கள் அவை உறுப்பினர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து இதுவரை 6 எம்.எல்.ஏ.க்கள்விலகியுள்ளனர், இதனால், எம்.எல்.ஏ.க்கள் பெங்களூர் கொண்டு செல்லப்பட்டு, சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் ராம் நாத் கோவிந்த்துக்கு ஆதரவாக குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மாறி வாக்களிக்களித்தனர். இதையடுத்து, அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் சங்கர்சிங் வகேலா எம்.எல்.ஏ.பதவியில் இருந்து விலகி, கட்சியில் இருந்தும்வௌியேறினார். இதைத் தொடர்ந்து இவரின் ஆதரவாளர்கள் 6 எம்.எல்.ஏ.க்கள்ராஜினாமா செய்தனர். அதில் 3 பேர் பா.ஜனதாவில் சேர்த்தனர்.

இதற்கிடையே குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்கள் அவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தியின் தனிச் செயலாளர் அகமது படேலை போட்டியிட வைக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. அவரும் அடுத்த மாதம் 8-ந்தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ராகஜீவ் படேல் கூறியதாவது-

இப்போது மாநிலத்தில் நடக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் காங்கிரஸ் கட்சியும் அதன் உயர்மட்டத் தலைவர்களுமே பொறுப்பு. இன்னும் வரும் நாட்களில் 20 எம்.எல்.ஏ.க்கள் வரை ராஜினாமா செய்து மற்ற கட்சியில் இணைவார்கள்.  ஆதலால், மாநிலங்கள் அவைத் தேர்தலில் அகமது படேல்வெற்றி பெறுவது இயலாது.

சமீபத்தில் அகமது படேலை சந்தித்தபோது,  தேர்தலில் போட்டியிடாதீர்கள் என்று இப்போது இருக்கும் சூழலைக் கூறி, நான்  அவரை எச்சரித்தேன். குஜராத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி ஒரு உறுப்பினர் கூட மாநிலங்கள் அவைக்கு தேர்வாகமாட்டார்கள்.

குஜராத்தில் இரு முக்கியக் கட்சிகள் இருக்கின்றன. காங்கிரஸில் இருந்து நான் விலகினால், பா.ஜனதாவில்தான் சேர வேண்டும். நான் ஏற்கனவே பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா, மாநிலத் தலைவர் ஜிதுபாய் வாகினி ஆகியோரிடம் பேசி, நான் கட்சியில் சேர்வதைக் குறித்து தெரிவித்துவிட்டேன்.

மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. தர்மேந்தர சிங் ஜடேஜாவும் கட்சியில் இருந்து விலகி, பா.ஜனதாவில் இணைகிறார். ஏராளமான காங்கிரஸ் உறுப்பினர்கள், கட்சி செயல்படும் விதத்தைப் பார்த்து அதிருப்தியில் இருக்கிறார்கள். நானும்,ராகவ்ஜீயும் பல முறை கட்சித் தலைமையை கடந்த காலத்தில் தொடர்புகொண்டும் முறையான பதில் இல்லை. அதனால், வரும் நாட்களில் தகுந்த நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.