ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் மிஸ்ஸிங்; அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்; பாஜகவின் கை வரிசையா?
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி உள்ளார்.
இந்த நிலையில் அனைத்து எம்எல்ஏ களுக்கு இந்த தகவலை தொலைபேசியில் சொல்ல முயற்சித்தபோது, சிலர் கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது ஆம் ஆத்மி கட்சியில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 11 மணிக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆம் ஆத்மி கட்சியை உடைப்பதற்கு பாஜக முயற்சிக்கிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் குற்றம்சாட்டி இருந்தார். டெல்லியில் மதுபானக் கடைகள் ஒதுக்கியதில் மற்றும் கொள்கைகளை பின்பற்றியதில் முறைகேடு நடந்து இருப்பதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடு உள்பட 32 இடங்களில் கடந்த வாரம் சோதனை மேற்கொண்டு இருந்தது.
இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், இதுகுறித்து ஆய்வு செய்து வருவதாகவும் சிபிஐ தெரிவித்து இருந்தது.ஆய்வுக்குப் பின்னர் இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று சிபிஐ விளக்கம் அளித்து இருந்தது.
இதையடுத்து, சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து இருந்தது. எந்த நேரத்திலும் மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று கூறப்பட்டது. இதையடுத்தே ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு பாஜக குறிவைத்து இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில்தான் எம்எம்ஏக்கள் கூட்டத்தை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கூட்டி இருந்தார்.
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை காலி செய்வதற்கு எம்எல்ஏ ஒருவருக்கு ரூ. 20 கோடி, பாஜக விலை பேசி இருப்பதாக நேற்று அந்தக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சவுரப் பரத்வாஜ் தெரிவித்து இருந்தார். இதேபோன்ற குற்றச்சாட்டை மணீஷ் சிசோடியாவும் வைத்து இருந்தார். வழக்குகளில் இருந்து வாபஸ் பெறவும், கட்சி மாறுவதற்கும், முதல்வர் பதவி அளிப்பதாகவும் தன்னிடம் பாஜக பேரம் பேசியதாக தெரிவித்து இருந்தார். இதையடுத்தே, எங்கள் மீது இருக்கும் அனைத்து வழக்குகளையும் நாங்கள் எதிர்கொண்டு ஒன்றும் இல்லாமல் செய்வோம் என்று சிசோடியா கூறியிருந்தார்.
ஆனால், ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை என்றும், யாரையும் அணுகவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.