முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ஏ.கே.அந்தோணி, என்போர்ஸ்மன்ட் டைரக்டரேட் (ED)ன் சோனியா காந்தி மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஈடி சமீபத்தில் இந்த விவகாரத்தில் கிரிஸ்டியன் மைக்கேல் என்கிற ஆயுதத் தரகரை விசாரித்தது. அப்போது அவர் இந்தப் பேரத்தில் சோனியா காந்தியின் பெயரைச் சொன்னதாக அறிக்கை வெளியிட்டது ஈடி. 

இது வேண்டுமென்றே சோனியா காந்தியின் பெயரை சிக்கவைக்க ஆளும் பிஜேபி அரசு கட்டவிழ்த்துவிடும் பொய்களுள் ஒன்று என்று கடுமையாக கண்டித்துள்ளார் அந்தோணி. தன்னுடைய பதவிக் காலத்தில் பாதுகாப்புத் துறையின் எவ்விவகாரங்களிலும் சோனியா காந்தி தலையிட்டதில்லை என்றும், இதில் ஊழல் இருப்பதாக இத்தாலியில் இருந்து குற்றச்சாட்டு வந்தவுடனேயே இதை விசாரிக்க ஆணையத்தை அமைத்தது தேசிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிதானென்றும் பிஜேபி இல்லையென்றும் அவர் சுட்டிக் காட்டினார். 

"இந்த ஊழல் விவகாரங்களில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட 6 பெரிய கம்பெனிகள்; அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சிங்கப்பூரைச் சார்ந்த கம்பெனிகளை தடை செய்யப்பட்ட கம்பெனிகளாக்கி பட்டியலிட்டது எங்கள் ஆட்சியில் தான். மோடியின் அரசில் அப்படி ஏதும் இதுவரை செய்திருக்கிறதா? " என்று அவர் கேள்வி எழுப்பினார். 

இதுபற்றி ஏற்கனவே கருத்து கூறிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பாஜகவின் ஆட்சியில் ஈடி, டி.வி மீடியா மற்றும் பாஜக அரசு நடத்தும் இத்தகைய செயல்முறைகள் தொடர்ந்தால் எல்லா வழக்குகளும் கோர்ட்டுகளுக்குப் பதிலாக டி.வி. சேனல்களில் தான் விசாரிக்கப்படும் என்றார்.