ஸ்ரீநகர், அக்.13-

காஷ்மீரில் அரசு கட்டிடத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய இரண்டு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். 56 மணி நேர துப்பாக்கிச் சண்டைக்குப்பின், 3-வது நாளான நேற்று, இந்த தாக்குதல் முடிவுக்கு வந்தது.

அடுக்கு மாடி கட்டிடம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், தீவிரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடவடிக்கையை தொடர்ந்து, இந்திய எல்லைக்குள் அடிக்கடி தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

கடந்த திங்கட் கிழமை அதிகாலையில் ஊடுருவிய இரு தீவிரவாதிகள், காஷ்மீரின் பாம்போர் நகரில், ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு பல மாடி கட்டிடத்தில் (தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம்) புகுந்தனர்.

நிதானத்துடன்

நமது பாதுகாப்பு படையினருக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படுத்தும் விதத்தில், நீண்ட தாக்குதல் நடத்த திட்டமிட்டு, பாதுகாப்பு மிகுந்த இந்த கட்டிடத்தை தீவிரவாதிகள் தேர்ந்து எடுத்து உள்ளனர்.

அதிரடியாக உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினால், சேதம் அதிக அளவில் இருக்கும் என்பதால், பாதுகாப்பு படையினர் மிகுந்த நிதானத்துடன், விட்டு விட்டு பதில் தாக்குதலை மேற்கொண்டனர்.

ராக்கெட் வீச்சு

முதலில் இலகு ரக துப்பாக்கி மற்றும் சிறிய ரக பீரங்கி மற்றும் வெடிகுண்டுகளை வீசி, பாதுகாப்பு படையினர் தாக்குதல் தொடுத்தனர். நேற்று 3-வது நாளாக தாக்குதல் தொடர்ந்தது. நேற்று கட்டிடத்தின் மீது பீரங்கி தாக்குதல் மற்றும் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

கட்டிடத்தில் இருந்து தாக்குதலின் வேகம் நேற்று குறைவாக காணப்பட்டது. தீவிரவாதிகளில் ஒருவன் நேற்று முன்தினம் மாலையிலேயே கொல்லப்பட்டு விட்டான். எத்தனை தீவிரவாதிகள் என்பது முதலில் தெரியாமல் இருந்த நிலையில், இரு தீவிரவாதிகள் மட்டுமே கட்டிடத்தில் புகுந்தது நேற்று உறுதி செய்யப்பட்டது.

இருவரும் சுட்டுக்கொலை

நேற்றைய தாக்குதலில் மற்றொரு தீவிரவாதியும் சுட்டுக்கொல்லப்பட்டான்.

இருப்பினும் பாதுகாப்பு படையினர் மிகுந்த கவனத்துடன், கட்டிடத்துக்குள் சென்று, தாக்குதல் நடத்திய இரு தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டதை நேற்று பிற்பகலில் உறுதி செய்தனர்.

56 மணி நேரம்

இதன் மூலம் ஏறத்தாழ 56 மணி நேரம் நீடித்த இந்த தாக்குதல் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

கட்டிடத்துக்கு அருகே உள்ள ஆற்றில் படகு வழியாக தீவிரவாதிகள் இருவரும் இந்திய எல்லைக்குள் ஊடுருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பிப்ரவரி மாதத்தில்

முழுமையான விசாரணைக்குப் பிறகுதான் இது குறித்த தெளிவான தகவல்கள் தெரியவரும். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதத்தில் இதே கட்டிடத்தில் ஊடுருவிய 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அப்போது நமது தரப்பில் இரு இளம் ராணுவ அதிகாரிகள் உள்பட 5 பாதுகாப்பு படையினர் மற்றும் அந்த கட்டிட அலுவலக பணியாளர் ஒருவர் பலியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.