கடந்த 8ம் தேதி இரவு முதல் 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. மேலும் கையில் இருப்பு உள்ள பணத்தை அனைத்து வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றி கொள்ளலாம் தெரிவித்தது. அதில், வங்கிகளில் ரூ.2500 மட்டும் பெற முடியும் என கூறியது. பின்னர், அந்த தொகை ரூ.4,500 என உயர்த்தியது.
இதையொட்டி நாடு முழுவதும் பொதுமக்கள், வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் அதிகாலை முதல் இரவு வரை கால் கடுக்க காத்திருந்து பணத்தை மாற்றி சென்றனர்.

இதே நேரத்தில் வியாபாரிகளும், வணிகர்களும் தொழிலுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமல், தவித்தனர். இதனால், வியாபாரம் கடுமையாக பாதித்தது. சில்லறை தட்டுப்பாடு ஒருபுறம் இருந்தாலும், பொருட்கள் வாங்க முடியாமல் திண்டாடினர்.
இந்நிலையில், மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் டெல்லியில், செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது, தற்போதுள்ள பண பரிமாற்றம் குறித்த பிரச்சனையில் 7 நிபந்தனைகளை கூறினார்.
அதில், வியாபாரிகள் மற்றும் வணிகர்கள், தங்களது வங்கி கணக்கில் இருந்து வாரத்தில் ரூ.50 ஆயிரம் வரை எடுக்கலாம் என தெரிவித்தார்.
அதேபோல் மத்திய அரசு ஊழியர்கள் (குரூப் ஏ,பி,சி,டி ஆகிய பிரிவினர்), அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் முன் பணமாக ரூ.10 ஆயிரம் வரை பெற்று கொள்ளலாம் என்றார்.
