பாகிஸ்தானில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தனை பத்திரமாக இந்தியாவிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடம் வலியுறுத்தினார்.

இந்த நிலையில், அபிநந்தன்  நாளை விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இம்ரானிகானின் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பை இந்தியா , பாகிஸ்தான் மற்றும் உலக நாடுகள் வரவேற்றுள்ளன.. 

இது குறித்து இம்ரான்கான் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசும்போது, அமைதிக்கான நடவடிக்கையாக இந்திய விமானி நாளை விடுதலை  செய்யப்படுவார் என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் நாட்டின் வளத்தை அந்த நாட்டின் முன்னேற்றத்துக்காக பயன்படுத்த நினைப்பதாகவும், போருக்காக அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

இம்ரான்கானின் அறிவிப்பை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர். இந்நிலையில் ராவல்பிண்டியில் உள்ள அபி நந்தன் விமானம் மூலம் லாகூர் அழைத்துவரப்படுகிறார். பின்னர் அவர் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்டுகிறார்.

இதையடுத்து அவர் அங்கிருந்து விமானம்  மூலம் டெல்லி அல்லது மும்பைக்கு அழைத்து வரப்படுவார் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அபி நந்தனை  வரவேற்க சென்னையில் இருந்து அவரது பெற்றோர்கள், ஸ்ரீநகரில் உள்ள அவரது மனைவி உள்ளிட்டோர் நானை வாகா செல்கின்றனர்.