புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும்விதமாக பாகிஸ்தானில் இயங்கி வந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படைகள் அதிரடி தாக்குதலை நடத்தியது. 

ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் விமானம் ஒன்று இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைந்து தாக்க தொடங்கியது. அப்போது இந்திய விமானி அபி நந்தன் அவர்களை விமானம்  ஒன்றில் விரட்டிச் சென்று தாக்கி துரத்தி அடித்தார்.

அப்போது பாகிஸ்தான் விமானம் அபி நந்தன் சென்ற விமானத்தை தாக்கியது. இதில் இந்திய விமானம் உடைந்து நொறுங்கியது. அதில் இருந்த அபி நந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்தார். ஆனால் அவர் குதித்த இடம் பாகிஸ்தான் என்பதால் அந்நாட்டு ராணுவ வீரர்கள் அபி நந்தனை சிறைப் பிடித்தனர்.

இதனைத்தொடர்ந்து, அபிநந்தனை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியது. ஜெனீவா ஒப்பந்தத்தின்படி இந்திய விமானியைப் பத்திரமாக விடுவிக்க வேண்டும் என்றும்  உலக நாடுகள் பலவும் வலியுறுத்தின.
 
இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் `நல்லெண்ண அடிப்படையில் இந்திய வீரர் அபி நந்தன் விடுவிக்கப்பட்டு, இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்’ என்று அறிவித்திருந்தார். அதன்படி இன்று அபி நந்தன் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.

இந்நிலையில்  தங்களுடைய மகனை வரவேற்பதற்காக அபிநந்தனின் தந்தை வர்தமன், தாயார் ஷோபனா  ஆகியோர் நேற்று  இரவு டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
 
விமானத்தில் அபிநந்தனின் தந்தை வர்தமன், தாயார் ஷோபனா ஆகியோருக்கு விமானப்பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்கள் விமானத்தில் ஏறியதும் கைத்தட்டியும் சிலர் சல்யூட் அடித்தும் வரவேற்றனர். சில பெண்கள் பெத்தால் இது போல் பிள்ளை பெற வேண்டும் என்றும் கூறினர். இந்த சம்பவம் அபி நந்தனின் பெறோர்களை நெகிழச் செய்துது.