இந்தியா மீது தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் விமானத்தை துரத்திச் சென்று சுட்டுவீழ்த்திய இந்திய விங் கமாண்டர் அபி நந்தன், பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டார்.

இதையடுத்து சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு மத்தியில் இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்ய பாகிஸ்தான் முடிவு செய்தது.அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று இம்ரான்கான் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து அபினந்தனை வரவேற்க இந்திய விமானப்படை உயர் அதிகாரிகள் குழு இன்று காலை டெல்லியில் இருந்து வாகாவுக்கு புறப்பட்டு சென்றது. இதற்கிடையே, இன்று காலை பாகிஸ்தானில் இருந்து அபினந்தன் விடுவிக்கப்பட்டார். அவர்  எல்லையில் இருந்து ராவல்பிண்டிக்கு அழைத்து சென்று இருந்தனர். அங்கு ராணுவ முகாமில் அவர் தங்க வைக்கப்பட்டு இருந்தார்.

அங்கு வைத்துதான் அவரிடம் பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் பேசினார்கள். நேற்றும் அவர் அங்குதான் வைக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், இன்று மதியம் அவர் ராவல்பிண்டியில் இருந்து லாகூர் நகருக்கு பலத்த பாதுகாப்புடன் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து சாலை மார்க்கமாக பாகிஸ்தான் அதிகாரிகள் வாகனங்கள் புடைசூழ வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டார்.

இன்று மாலை வாகா எல்லை வந்தடைந்த அபினந்தனை இந்திய மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். ஆனால், அவரை ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், இரவு 9 மணியளவில் பாகிஸ்தான் அதிகாரிகள் தமிழக வீரர் அபினந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.  .

கோட் சூட் அணிந்து அபி நந்தன் கம்பீரமாக இந்தியாவுக்குள் அடி எடுத்து வைத்தார். அவரை அங்கிருந்த ஏராளமானோர் வரவேற்றனர்.