மியான்மர் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றபின், முதல்முறையாக இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக ஆங் சான் சூ கி இந்தியா வருகிறார்.
இம்மாதம் 16-ந்தேதி டெல்லி வரும் ஆங் சான் சூ கி , கோவா நகரில் நடைபெறும் பிரிக்ஸ்- ‘பிம்ஸ்டெக்’ நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று மியான்மர் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரும் ஆளும் கட்சியின் தலைவருமான ஆங் சான் சூ கி இந்தியாவுக்கு 16-ந்தேதி முதல் 19-ந்தேதிமுதல் பயணம் மேற்கொள்கிறார். இவருடன் சேர்ந்து அந்நாட்டு அரசின் பல்வேறு துறை அமைச்சர்கள் உடன் வருகின்றனர்.
16-ந்தேதி நடக்கும் பிம்ஸ்டெக் நாடுகள் மாநாட்டைத் தொடர்ந்து, பிரதமர் மோடியுடன் பல்வேறு துறைகள் தொடர்பாக ஆங் சான் சூகி பேச்சு நடத்துகிறார்.
ஆங் சான் சூ கியின் வருகை, இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர நலன்கள் குறித்து ஆலோசித்து, உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள இந்த பயணம் வாய்ப்பாக அமையும்.
இரு தலைவர்களின் சந்திப்பின் போது, எல்லை மேலாண்மை, இந்திய-மியான்மர் எல்லையில் தீவிரவாதிகள் நடமாட்டம் ஆகியவை குறித்து முக்கியமாக பேசப்படும் எனத் தெரிகிறது. மேலும், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வழிகள் குறித்தும் பேசப்படலாம் எனத் தெரிகிறது.
இந்த பயணத்தின் போது, ஆங் சான் சூ கி குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோவை சந்தித்து பேசுகிறார். மேலும், நாட்டின் முக்கிய வர்த்தக தலைவர்கள், நிறுவனங்களின் அதிபர்கள் ஆகியோருடன் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆங் சான் சூகி பேசி இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்த உள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
