பாஜக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி விலகியுள்ளது. ஜூலை 19ஆம் தேதி நடைபெறும் ஆன்லைன் ஆலோசனைக் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்காது என அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
Aam Aadmi Party withdraws from India alliance : மத்தியில் பாஜக அரசை வீழ்த்த இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து இந்தியா கூட்டணியை தொடங்கியது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் சமாஜ்வாதி, சிவசேனா, திமுக, தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள், ராஷ்டிரிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஐ.யூ.எம்.எல் உள்ளிட்ட கட்சிகளின் இடம்பெற்றிருந்தது. இந்த கூட்டணியானது நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு கடும் சவாலாக இருந்தது. 400 தொகுதிகளை பெறுவோம் என இலக்கு வைத்த பாஜகவிற்கு இந்தியா கூட்டணியால் பெரும்பான்மை கூட கிடைக்க முடியாத நிலை உருவானது. இதனையடுத்து பீகாரின் நிதிஷ்குமார் மற்றும் ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு உதவியால் பாஜக ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது.
இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி அமைதி காத்திருந்த நிலையில் வரும் ஜூலை 19ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஆன்லைன் வாயிலாக இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அமைப்பு செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்தில் தற்போது நாட்டில் நிலவும் பிரச்சனை, பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்த ஆலோசிக்க திட்டமிடப்பட்டிருந்தது. எனவே இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கூட்டத்தில் முக்கிய கட்சிகளான ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இல்லை
இதற்து தற்போது விடை கிடைத்துள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங், நாங்கள் இந்தியா கூட்டணியில் தற்போது இல்லை என தெரிவித்துள்ளார். எனவே இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என கூறியுள்ளார். எனவே வரும் மாநில சட்டமன்ற தேர்தல்களில் தனித்து செயல்படுவதற்காகவே இந்த முடிவை ஆம்ஆத்மி எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மோதல் நிலவிவருகிறது. இதனை தொடர்ந்தே இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்காத திரிணாமுல் காங்கிரஸ்
அதே நேரம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லையென தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலில் வருகிற 21ஆம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக மேற்குவங்கத்தில் மிகப்பிரம்மாண்ட பேரணி நடைபெற இருப்பதாகவும் இடதுசாரிகளின் ஆட்சியில் போலீசாரால் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதையொட்டி நினைவு தினத பேரணியால் இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லையென தகவல் கூறப்படுகிறது.
