மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 90 லட்சம் மாடுகளுக்கு தனித்த அடையாள எண் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, நாட்டின் முன்மாதிரி மாநிலமாக மாறியுள்ளது.

மனிதர்களுக்கு தனி நபர் அடையாள அட்டை (ஆதார்) வழங்குவதைப் போல மாடுகளுக்கும் தனித்த அடையாள எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தை இந்தியாவில் முதல் மாநிலமாக மத்தியப் பிரதேசம் தொடங்கி படுவேகமாக நடத்தி வருகிறது. அதன்படி, தற்போது வரை 90 லட்சம் மாடுகளுக்கு 12 இலக்கம் கொண்ட அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மாடுகளைப் பற்றிய விவரங்கள் விண்ணப்பங்கள் மூலமாக பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்டு அவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் சுமார் 7.5 லட்சம் மாடுகளுக்கு அடையாள எண் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

மாடுகளின் உடல் நலனைக் கண்காணிக்கவும், எண்ணிக்கை, பெருக்கம், நோய் பரவல் உள்ளிட்ட விவரங்களைச் சேகரிக்கவும், பால் பெருக்கத்தை அதிகரிக்கவும் ஒவ்வொரு மாட்டுக்கும் 12 இலக்கம் கொண்ட தனித்த அடையாள எண் (யு.ஐ.டி.) வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக பார்கோடு கொண்ட அட்டை ஒவ்வொரு மாட்டின் காதிலும் பொருத்தப்படும். மேலும், மாட்டின் உரிமையாளர்களிடம் ஒரு நல அட்டை வழங்கப்படும்.

அதில், மாட்டின் புகைப்படம், அடையாளங்கள், வயது, அடையாள எண், இனம், சினை ஊசி போட்ட விவரங்கள், ஏற்பட்ட நோய்கள், அளிக்கப்பட்ட சிகிச்சைகள், எங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, எந்த மருத்துவர் சிகிச்சை அளித்தார், மாட்டின் கன்றுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதில் இடம் பெற்றிருக்கும்.

அத்துடன், இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு கால்நடை பராமரிப்புத் துறையின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும். சேகரிக்கப்படும் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதால் மாநிலம் முழுவதிலும் உள்ள மாடுகளின் விவரங்களை எந்தப் பகுதியில் உள்ளவர்களாலும் அறிந்து கொள்ள முடியும்.

அட்டை வழங்கப்படும். அனைத்து மாடுகளுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்ட பிறகு, மாவட்டம் வாரியாக எத்தனை கால்நடைகள் உள்ளன, அவற்றில் எத்தனை கால்நடைகளுக்கு சினை ஊசி போடப்பட்டுள்ளது, அதில் எத்தனை மாடுகள் கருவுற்றுள்ளன என்பது போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும்.

மாடுகளுக்கு தனித்த அடையாள அட்டையை வழங்குவதன் மூலமாகத் திருட்டு, இறைச்சிக்காக கடத்தப்படுவது போன்றவையும் கட்டுப்படுத்தப்படும் என்று கால்நடை பராமரிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன