சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட நபரால் பெண் மருத்துவர் கொடூர கொலை.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..
கேரளாவில் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட நபரால் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் சிகிச்சைக்கு அழைத்துவரப்பட்ட நபரால் பெண் மருத்துவர் குத்தி கொலை செய்யபப்ட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த பெண் மருத்துவர் 23 வயதான வந்தானா என்பதும், அவர் கொட்டாரக்காரா தாலுகா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்துள்ளார். கொல்லத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி ஒன்றில் இறுதியாண்டு எம்.பி.பி.எஸ் பயின்று வந்துள்ளார். இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர் 42 வயதான சந்தீப் என்பதும், அவர் பள்ளி ஆசிரியாக பணிபுரிந்து வருகிறார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தினருடன் சண்டையிட்ட பின்னர், காவல்துறையினர் சந்தீப்பை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட சண்டையில் காயம் அடைந்ததால் சந்தீப்பை காவல்துறையினர் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அந்த நபரின் காலில் ஏற்பட்ட காயத்தை மருத்துவர் சிகிச்சை அளித்த போது, திடீரென ஆத்திரமடைந்த அவர், அங்கு நின்றிருந்த அனைவரையும் கத்திரிக்கோல் மற்றும் அரிவாள் மூலம் தாக்கினார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : தமிழகத்தில் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய உள்ள ஹூண்டாய்! நாளை கையெழுத்தாகும் புரிந்துணர்வு ஒப்பந்தம்
அங்கிருந்த 5 நபர்களை தாக்கிய பிறகு சந்தீப் மருத்துவமனையையும் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. சந்தீப் தற்போது காவல்துறையினரின் கஸ்டடியில் உள்ளார். எனினும் அவர் ஏன் கொடூர தாக்குதல் நடத்தினார் என்பது குறித்த விவரம் இன்னும் தெரியவில்லை. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, சிகிச்சை அளிக்கும் போது குற்றவாளியின் கைகளில் கைவிலங்கு போடப்படவில்லை என்று மருத்துவ சங்க உறுப்பினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் பெண் மருத்துவரின் கொடூர கொலையை கண்டித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை காலை 8 மணி வரை இந்த போராட்டம் தொடரும் என்றும் மருத்துவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கேரளாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சை மட்டுமே வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பயிற்சி மருத்துவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் போலீசார் குற்றவாளிகளை சிகிச்சைக்கு அழைத்து வரும், மருத்துவமனைகளில் உரிய முன்னேற்பாடுகள் செய்திருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க : வீரபாண்டிய கட்டபொம்மனின் மரணத்தை பற்றிய செப்பு பட்டயம்.. எட்டயபுரத்தில் கண்டுபிடிப்பு