தேசபக்தி பீறிட்டுக்கிளம்பியுள்ள நிலையில் திரையுலகினர் புல்வாமா தாக்குதல் குறித்தும், விமானி அபிநந்தன் குறித்தும் படம் எடுக்கத் துடித்துக்கொண்டிருக்க, ஒரு டெக்ஸ்டைல் மில் அதிபர் ராணுவ வீரர்களின் போராட்டப் படங்களைப் பிரிண்ட் செய்து சேலைகள் தயாரிப்பதில் மும்முரமாக இறங்கியுள்ளார்.

பொதுவாகவே வியாபாரிகளின் மூளை ஆபத்தானது. பெரிய வியாபாரிகளின் மூளை பேராபத்தானது. என்ன செய்தால் தங்கள் பொருள் சந்தையில் நல்லபடியாக விற்கும் என்பதற்காக என்னவேண்டுமானாலும் செய்யக்கூடியவர்கள் இவர்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த அன்னபூர்ணா டெக்ஸ்டைல்ஸ் மில் அதிபர் இந்திய ராணுவ வீரர்களின் சாதனைகளைப் படங்களாகக் கொண்ட சேலைகளை மிக அதிக அளவில் உற்பத்தி செய்துவருகிறார்.

இதுகுறித்து பேட்டியளித்த அன்னபூர்ணா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன இயக்குநர் மனீஷ்,’ நாங்கள் தயாரிக்கும் இந்த சேலைகளில் நமது ராணுவ வீரர்களின் வீரதீர பராக்கிரமத்தையும், நமது ராணுவத்தின் ஆயுதபலம் குறித்த படங்களையும் மட்டுமே பிரிண்ட் செய்கிறோம். இந்த முயற்சிக்கு இந்தியா முழுவதிலிருந்தும் பெரும் வரவேற்பு கிட்டியுள்ளது. ஆர்டர்கள் குவிகின்றன. இதில் கிடைக்கும் லாபத்தை புல்வாமா வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்யப் பயன்படுத்துவோம்’ என்று சாமர்த்தியமாக தனது தேசபக்தி வியாபாரத்துக்கு விளக்கம் தருகிறார்.

இந்த தேசபக்தி சேலைகளை ‘புல்வாமா’ தாக்குதல் குறித்து படம் எடுக்கத்துடித்துக்கொண்டிருக்கும் இயக்குநர்கள் தங்கள் கதாநாயகிகளுக்குக் கட்டிப்பார்த்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இன்னொரு பக்கம் நம்ம சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தமன்னா, ஹன்ஷிகா மோத்வானிகளுக்கு இதே புடவைகளைக் கட்டிவிட்டு தன் பங்குக்கு தேசபக்தி டான்ஸ் ஆடுவதும் நடைபெறலாம்.