சர்வதேச அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் தீவிரவாதத்தை எதிர்க்க திட்டமிட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட எதிர் நடவடிக்கை தேவை என்று பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

பிரிக்ஸ் மாநாடு

சீனாவின் புஜியான் மாநிலம், ஜியாமென் நகரில் 3 நாள் ‘பிரிக்ஸ்’ (பிசேில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) நாடுகள் கூட்டமைப்பு மாநாடு கடந்த 2 நாட்களாக நடந்தது. இந்த மாநாட்டில் 5 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டின் கடைசி நாளான நேற்று பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள்மட்டுமல்லாது, எகிப்து, தஜிகிஸ்தான், தாய்லாந்து, மெக்சிக்கோ, கென்யா ஆகிய நாடுகளின் தலைவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பேச்சு

இந்த மாநாட்டில் நேற்று  “ பிரிக்ஸ் வளரும் சந்தை மற்றும் வளரும் நாடுகள் இடையே பேச்சு’’ என்ற தலைப்பில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது-

நட்புறவு

வளர்ச்சியை எதிர்நோக்கி மிகுந்த ஆவலுடன், ஆர்வத்துடன் வளரும் நாடுகள் இருக்கும் நிலையில், அந்த நாடுகளுடன் இந்தியா மிகச்சிறந்த நட்புறவு வைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

பிரிக்ஸ் நாடுகள் என்ன செய்தாலும், உலகில் உள்ள கணிசமான நாடுகளுக்கு அது தாக்கத்தை ஏற்படுத்தும். ஆதலால், சிறந்த உலகை நாம் உருவாக்குவதில் நமக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. ஒவ்வொரு செங்கல்களாக, நாம் இந்த பிரிக்ஸ் அமைப்பை உருவாக்கி இருக்கிறோம்.  அடுத்த 10 ஆண்டுகளில் பிரிக்ஸ் நாடுகளுக்கு பொற் காலம் என்று கூறி இருந்தேன். இந்த பொற்காலம், நமது செயலாற்ற அனுகுமுறை, கொள்கை, செயல்பாடுகளை பொறுத்து அமையும்.

அதிக மதிப்பு

பிரிக்ஸ் நாடுகளோடு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இங்கு அமர்ந்துள்ளனர் இந்த நாடுகளோடு, இந்தியா நெருங்கிய தொடர்பும், அதிகமான மதிப்பும் வைத்துள்ளது. நிலையான முழுமையான வளர்ச்சியை எட்ட இந்த நாடுகள் இந்தியோடு அனைத்து விஷயங்களையும் பரமாறிக்கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை உருவாக்கிய சீன அதிபர் ஜி ஜின்பெங்குக்கு நன்றி.

10 முக்கிய பொறுப்புகள்

உலகின் மக்கள் தொகையில் பாதி எண்ணிக்கையை பிரிக்ஸ் நாடுகள் கொண்டுள்ளது. ஆதலால், செயலாற்ற அனுகுமுறை, ‘10 உன்னதமான பொறுப்புகள்’ மூலம் சர்வதேச அளவில் பரிமாற்றத்தை அடைய முடியும்.

தீவிரவாத எதிர்ப்பு

முதலாவதாக, பாதுகாப்பான உலகை உருவாக்குவது. தீவிரவாதம், சைபர்பாதுகாப்பு, பேரழிவு மேலாண்மை ஆகியவற்றுக்கு திட்டமிட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட செயல்திட்டத்தை செயல்படுத்துவது.

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மூலம் எடுக்கப்படும் நடவடிக்கையால், பருவநிலைமாற்றத்தைத் தடுத்து, பசுமையான உலகை உருவாக்க முடியும்.

உருவாக்குதல்

மேலும், அதிகாரமிக்க உலகை உருவாக்குதல், முழுமையான உலகை உருவாக்குதல், டிஜிட்டல் உலகை உருவாக்குதல், திறன்மிக்க உலகை உருவாக்குதல், ஆரோக்கியமான உலகை உருவாக்குதல், நியாயமான உலகை உருவாக்குதல், அனைவரையும் இணைக்கும் உலகம், இசைவான உலகை உருவாக்குதல் நமது பொறுப்புகளாகும்.

இந்தியாவின் திட்டம்

ஐ.நாவின் 2030ம் ஆண்டு செயல்திட்டம் படி, இந்தியாவின் வளர்ச்சித் திட்டம் என்பது, அனைவருக்கும், ஒவ்வொருத்தருக்கும் வளர்ச்சி (சப்கா சாத் சப்கா விகாஸ்) என்பதாகும். இந்த வளர்ச்சித் திட்டத்தின் ஒருபகுதியாக, அனைவருக்கும் வங்கிக்கணக்கு, அனைவருக்கும் ஆதார் கார்டு, புத்தாக்க முறையில் நிர்வாகச் சீர்திருத்தம், 36 கோடி மக்களுக்கு நேரடி பணப்பரிமாற்றம் ஆகியவற்றை செய்து இருக்கிறோம்.

செயற்கைக்கோள்

எங்களின் பிராந்திய நட்புறவு நட்புறவு நாடுகளின் வளர்ச்சிக்காகவும், கல்வி, சுகாதாரம், தகவல் தொடர்பு, பேரழிவு மேலாண்மை ஆகியவற்றில் இலக்குகளை அடையவும் தெற்கு ஆசிய செயற்கைக்கைக் கோளை இந்தியா செலுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.