கர்நாடக மாநிலம், சிக்மகலூர் மாவட்டத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் இந்துப் பெண்ணை திருமணம் செய்வதற்காக மதம் மாறினார். இவர்களுக்கு பஜ்ரங்தளம், இந்து மகாசபா கணபதி சேவா சமிதி அமைப்பினர் திருமணம் செய்து வைத்தனர்

வழக்கமாக, இந்துப் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் திருமணம் செய்யும் லவ்ஜிகாத் இருப்பதாக குற்றம் சாட்டும் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தளம் அமைப்பினர், இப்போது முஸ்லிம் இளைஞரை மதம் மாற்றியுள்ளனர்.

ஹூப்ளி பகுதி, ஷிரவடா கிராமத்தை் சேர்ந்தவர் முஸ்தாக் ராஜேசாப் நடாப்(வயது28). 8-ம் வகுப்பு படித்துள்ள முஸ்தாக், வீடுகளுக்கு டைல்ஸ் ஒட்டும் பணியைச் செய்து வருகிறார்.

இவர் அப்பகுதியைச் சேர்ந் விஜயலட்சுமி(21) என்ற இந்துப் பெண்ணை காதலித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்ய வீட்டில் அனுமதி கேட்டனர்.

ஆனால், இருதரப்பு வீட்டிலும் இந்த திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை.முஸ்தாக் உடன் 2 சகோதரர்களும், 3 சகோதரிகளும் உள்ளனர். இதையடுத்து, இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இதற்காக இவர்கள் இருவரும் அப்பகுதியைச் சேர்ந்த பஜ்ரங்தளம் மற்றும் இந்து மகாசபா கணபதி சேவா சமிதி அமைப்பிடம் ெதரிவித்தனர். இதையடுத்து அவர்களுக்கு பசவனஹல்லியில் உள்ள ஓம்காரேஸ்வரர் கோயிலில் திருமணம் செய்துவைத்தனர்.  ராம சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முதாலிக் திருமணத்தை நடத்தி வைத்தார்.

இந்த திருமணத்துக்கு முன்பாக, முஸ்லிம் இளைஞர் முஸ்தாக்  இந்துவாக மதம்மாறினார். தனது பெயரை பிரதாப் என மாற்றிக்கொண்டார்.

இந்த திருமணம் குறித்து மதம் மாறிய பிரதாப் கூறுகையில், “காதலுக்கு மதம் இல்லை. நான் இந்துவாக மாறி இந்த பெண்ணை திருமணம் செய்ததில் எந்த தவறும் இல்லை’’ என்றார். பிரதாப்பை தனது குடும்பத்தினர் மருமகனாக ஏற்றார் என விஜயலட்சுமியும் தெரிவித்தார்.