ஒடிசாவில் ஆற்றுக்கு குளிக்க சென்ற சிறுவன் முதலையால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள நிம்பூர் கிராமத்தில் உள்ள பிராமணி ஆற்றின் அருகே 10 வயது சிறுவன், தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு முதலையால் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவன் அசுதோஷ் ஆச்சார்யா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரின் தாய் மற்றும் சகோதரியின் முன்னிலையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மணிப்பூரில் மீண்டும் கலவரம்; 9 பேர் உயிரிழப்பு; விடுப்பில் இருக்கும் போலீசாருக்கு அழைப்பு!
இன்று காலை தாய், மகள், மகன் மூவரும் ஆற்றுக்கு குளிக்க சென்ற போது, தண்ணீரில் இருந்து திடீரென வெளிவந்த முதலை சிறுவனை தனது தாய் மற்றும் சகோதரியின் முன்னால் இழுத்துச் சென்றது. இதனால் அதிர்ந்து போன தாயும் சகோதரியும் தங்களுக்கு உதவும் படி கதறி அழுதுள்ளனர். இதையறிந்த கிராம மக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து முதலையின் பிடியில் இருந்து சிறுவனை மீட்க முயன்றனர். ஒரு மணி நேர தீவிர முயற்சிக்குப் பிறகு, சிறுவனின் சிதைந்த உடல் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது.
இதற்கிடையில், உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொடூரமான சம்பவத்தை நினைவு கூர்ந்த சிறுவனின் சகோதரி, "நாங்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு முதலை தோன்றி எனது சகோதரனை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது. அவர் உதவிக்காக அழுதார், ஆனால் எங்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை" என்று கூறினார்.
முதலைகளின் இனப்பெருக்க காலத்தில், இத்தகைய தாக்குதல்கள் அதிகமாக நடந்து வருகின்றன. இப்பகுதியில் ஆண்டுதோறும் பலர் முதலை தாக்குதலில் உயிரிழக்கின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கக் கோரியும், அதற்கு நிரந்தரத் தீர்வு காணக் கோரியும் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து பலமுறை புகார் அளித்தும் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.
புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழந்தததால் அதிர்ச்சி.. 15 கிராமங்கள் பாதிப்பு..
