பழங்குடியின இளைஞரை தாக்கி, வாயில் சிறுநீர் அடித்த கொடூரக் கும்பல்.. மற்றொரு அதிர்ச்சி சம்பவம்..
ஆந்திராவில் பழங்குடியின இளைஞரை தாக்கிய கும்பல், அவரின் வாயில் சிறுநீர் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

சமீப காலமாக பழங்குடியினர் மற்றும் தலித் மக்களை சிலர் கொடூரமாக தாக்குவதும், மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில் மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பாதிக்கப்பட்ட நபரின் கால்களைக் கழுவி மன்னிப்பு கேட்டார். சிறுநீரை ஊற்றிய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் தற்போது ஆந்திராவில் அதே போன்று மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோல் என்ற இடத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஒரு கும்பல் பழங்குடி இன இளைஞரை தாக்கியதுடன், அவரின் வாயில் சிறுநீர் அடித்ததாக கூறப்படுகிறது.
குற்றவாளிகள் மதுபோதையில் இருந்ததாகவும், இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். பழங்குடியின இளைஞரின் கொடூரமாக தாக்கும் சிலர், அவர் வாயில் சிறுநீர் அடிப்பதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. ஜூன் மாதம் 19-ம் தேதி நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்வர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட இருவரும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்றும், மூன்று சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், முதல் குற்றவாளி நவீன் மற்றும் இருவர் தலைமறைவாகிவிட்டனர் என்றும், அவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.