விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ வராகலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் சந்தனோத்சவ விழாவின் போது தற்காலிக மேடை இடிந்து விழுந்ததில் ஏழு பேர் உயிரிழந்தனர், நான்கு பேர் காயமடைந்தனர். 

தரிசனத்திற்காக காத்திருந்த மக்கள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிம்மாச்சல்த்தில் அப்பனசுவாமி திருக்கோவில் உள்ளது. அப்பன்னசாமியை நிஜ ரூப தரிசனம் மூலம் வழிபடுவதற்காக ஏராளமான பக்தர்கள் நேற்று இரவு முதல் சிம்மாச்சலத்தில் குவிந்திருந்தனர். அப்போது பயங்கர காற்றோடு பலத்த மழை பெய்ய தொடங்கியது. அப்போது 300 ரூபாய் தரிசன டிக்கெட் வரிசை மீது போடப்பட்டிருந்த சிமெண்ட் சுவர் இடிந்து விழுந்து சாமி தரிசன டிக்கெட் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்கள் பலர் சிக்கிக் கொண்டனர். 

அதிகாலையில் சந்தனோத்சவ விழாவின் போது 20 அடி நீளமுள்ள தற்காலிக மேடை இடிந்து விழுந்ததில் பக்தர்கள் அலறி துடித்தனர். இதனையடுத்து அங்கிருந்த மற்ற பக்தர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், போலீசார், தீயணைப்பு படையினர் ஆகியோர் விரைந்து செயல்பட்டு இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட பக்தர்களை மீட்டனர். இருந்த போதும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். 

கொட்டிய மழை- இடிந்த சுவர்

SDRF வீரர் கூறுகையில், இந்த சம்பவம் அதிகாலை 2.30 மணியளவில் நடந்தது. "இந்த சம்பவத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்... சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தோம் என தெரிவித்தார். ஆந்திரப் பிரதேச உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் வங்கலாபுடி அனிதாவும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று அனிதா தெரிவித்தார். "கனமழை பெய்தது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இது ஒரு துரதிர்ஷ்டவசமானது," என்று அவர் கூறினார். இந்த சம்பவம் பற்றிய வழக்கு பதிவு செய்துள்ள சிம்மாச்சலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.