திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற ஜெகந்நாத் ரத யாத்திரையின்போது, தேர் மீது மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி 7 பேர் பலியாகியுள்ளனர்.
திரிபுராவின் உனோகோட்டி மாவட்டத்தில் உள்ள குமார்காட்டில் புதன்கிழமை மாலை ரத யாத்திரை ஊர்வலத்தின்போது, உயர் அழுத்த மின்கம்பி தேர் மீது உரசி தீப்பிடித்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேர் பலியானார்கள். மேலும் குறைந்தது 18 பேர் காயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அகர்தலா அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ஜகந்நாதரின் உல்டா ரத யாத்திரை திருவிழாவின் போது குமார்காட் பகுதியில் மாலை 4.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
ரத யாத்திரை முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, ஜெகந்நாதர் தன் உடன்பிறந்தோரான பாலபத்ரா மற்றும் தேவி சுபத்ராவியுடன் தங்கள் இருப்பிடத்துக்குத் திரும்புவதை இந்தத் திருவிழா குறிக்கிறது.
நிலவுக்குச் செல்லும் சந்திரயான் 3! ஜூலை 13ஆம் தேதி விண்ணில் ஏவப்படும்... இஸ்ரோ அறிவிப்பு

இந்த விழாவையொட்டி, இரும்பால் செய்யப்பட்ட தேரை ஏராளமானோர் ஆர்வத்துடன் இழுத்தனர். அப்போது, தற்செயலாக தேரின் மேல் பகுதி 133 கிலோவாட் மின்சாரம் பாயும் மின்சார வயரில் உரசி தீ பற்றியது என போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா இரங்கல் தெரிவித்துள்ளார்.
"குமார்காட்டில் நடந்த விபத்தில், தேர் இழுக்கும்போது மின்சாரம் தாக்கியதில் பல பக்தர்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை அறிந்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள். இந்த இக்கட்டான நேரத்தில் மாநில அரசு அவர்களுக்கு துணை நிற்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.
புதிய உச்சம் தொட்ட சென்சென்ஸ்! முதல் முறையாக 64,000 ஐத் தாண்டியது! காரணம் என்ன?
