இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 69,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,36,92-ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் உருவான கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில்,  இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கடந்த 24 மணி நேரத்தில்  69,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,36,92ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 977 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கையும் 53,866ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 20,37,870 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 6,86,395ஆக உள்ளது. 

இந்தியாவில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 6,28,642 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 21,033ஆக உயர்ந்துள்ளது. 2வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 3,55,449 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6,123 பேர் உயிரிழந்துள்ளனர். 3வது இடத்தில் உள்ள ஆந்திராவில் 3,16,003 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா பரிசோதனையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 9,18,470 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.