கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக இன்று ஒரேநாளில் 5070 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14 லட்சத்தை நெருங்கிவிட்டது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களை தொடர்ந்து கடந்த சில தினங்களாக கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. 

தமிழ்நாட்டில் தினமும் 60 ஆயிரம் பரிசோதனைகளுக்கு மேல் செய்யப்படுகிறது. அதில், 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு உறுதியாகிறது. அதேவேளையில், தமிழ்நாட்டில் தினமும் கொரோனா பாதிப்பு உறுதியாகும் அளவிற்கு நிகராக அல்லது அதிகமானோர் குணமடைந்துவருகின்றனர். 

ஆனால் கர்நாடகாவில் 30 ஆயிரம் என்கிற அளவில்தான் பரிசோதனை செய்யப்படுகிறது. இருப்பினும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகிறது. தொடர்ந்து 3வது நாளாக இன்றும் கர்நாடகாவில் 5000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று புதிதாக 5070 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து கர்நாடகாவில் மொத்த பாதிப்பு 90942ஆக அதிகரித்துள்ளது. பெங்களூருவில் இன்று மேலும் 2036 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 43,503ஆக அதிகரித்துள்ளது. 

கர்நாடகாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 33,750 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று மேலும் 72 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 1796 ஆக அதிகரித்துள்ளது. 

கர்நாடகாவில் செய்யப்படும் பரிசோதனைக்கு, பதிவாகும் பாதிப்பு எண்ணிக்கை மிக மிக அதிகம். பரிசோதனை vs பாதிப்பு விகிதம், கர்நாடகாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்திருப்பதை உணர்த்துகிறது.