மத்திய உள்துறை அமைச்சகத்தில் கடந்த 11 ஆண்டுகளாக தமிழக அரசின் 5 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.

அரசியல் சட்டத்தின் பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்ய குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அவசியம். அதற்கு முன்பாக இந்த மசோதாக்களுக்கு மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் தொடர்புடைய பிற அமைச்சகங்களும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரலும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இதன் பிறகு இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். இவர்கள் அனைவருக்கும் மசோதாவை அனுப்பி ஒப்புதல் பெற்றுத்தரும் முகவராக மத்திய உள்துறை அமைச்சகம் செயல்படுகிறது.

இந்நிலையில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக பல்வேறு மாநிலங்களால் அனுப்பி வைக்கப்பட்ட 94 மசோதாக்கள் உள்துறை அமைச்சகத்திடம் தற்போது நிலுவையில் உள்ளன. இவற்றில் தமிழக அரசால் அனுப்பப்பட்ட 5 மசோதாக்களும் அடங்கும்.

தமிழக தொழிற்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்துதல் மற்றும் கட்டண நிர்ணயம் குறித்த 2006-ம் ஆண்டு மசோதா திமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்டது.

அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் ‘நிலம் கையகப்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியேற்ற மசோதா (2014), தமிழக பல்கலைகழகங்கள் சட்டத் திருத்த மசோதா (2016) ஆகியவற்றை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார்.

மீதம் உள்ள இரண்டு மசோதாக்களும் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெற தற்போதைய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டவை.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், “தமிழகத்தின் 5 மசோதாக்கள் மீதும் மத்திய அமைச்சகங்கள் ஆட்சேபணை எழுப்பியுள்ளன.

இவை திரும்ப அனுப்பப்பட்டு தமிழக அரசின் பதிலுக்காகக் காத்துள்ளன. இந்நிலையில் அவற்றுக்கு ஒப்புதல் கிடைக்க வாய்ப்புகள் இல்லை. எனவே அவற்றை தமிழக அரசு திரும்பப் பெறுவதை தவிர வேறு வழியில்லை. இவற்றை மீண்டும் சட்டப்பேரவையில் விவாதம் செய்த பின் திரும்பப் பெறவேண்டும். இப்படி செய்வது மாநில அரசு தனது தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு சமமாகும் என்பதால் பல மாநிலங்கள் அதை செய்வதில்லை. இதுபோன்ற மசோதாக்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் பொறுப்பாகாது” என்று தெரிவித்தனர்.