வரும் 1-ம் தேதி முதல் மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி அளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

செப்டம்பர் 1-ம் தேதி முதல் 4-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. அதில், மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பள்ளி- கல்லூரிகள், தியேட்டர்களை திறக்க தடை நீடிக்கும் என கூறுகிறார்கள். இந்நிலையில், 4-ம் கட்ட தளர்வுகள் எப்படி இருக்கும் என்று மத்திய அரசு உயர் அதிகாரிகள் கூறுகையில், ’’அந்தந்த மாநில அரசுகள், அங்குள்ள கொரோனா சூழ்நிலையை பொறுத்து, மெட்ரோ ரெயிலை இயக்குவது பற்றி இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம்.

பள்ளி, கல்லூரிகளை திறக்க இப்போதைக்கு அனுமதி அளிக்கப்படாது. ஆனால், பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. ஆனால், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. சினிமா தியேட்டர்களில் சமூக இடைவெளி விட்டு குறைவான பார்வையாளர்களை அனுமதிப்பது தியேட்டர் அதிபர்களுக்கும், சினிமா தயாரிப்பாளர்களுக்கும் வியாபார ரீதியாக பலன் அளிக்காது. எனவே, சினிமா தியேட்டர்களுக்கு தடை நீடிக்கும்

.

அரசியல் பொதுக்கூட்டங்கள், சமூக, கலாசார, ஆன்மிக, கல்வி, விளையாட்டு நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு தடை நீடிக்கும். மதுபான பார்களில் மது விற்க அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது. 4-ம் கட்ட தளர்வில், எது எதற்கு தடை என்பதை மட்டுமே மத்திய அரசு அறிவிக்கும். மற்ற செயல்பாடுகள் அனுமதிக்கப்படும். இருப்பினும், மாநில அரசுகள், கூடுதலான செயல்பாடுகளுக்கு தடை விதித்துக்கொள்ளலாம். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிடப்படும்’’ எனத் தெரிவித்துள்ளனர்.