4 Powerlifters Killed In Accident In Delhi World Champion Seriously Hurt

தலைநகர் தில்லி அருகே கடுமையான பனிமூட்டம் காரணமாக, கார் ஒன்று விபத்தில் சிக்கியது. இதில், காரில் பயணம் செய்த பளுதூக்கும் வீரர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

தலைநகர் தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்தக் குளிர் காலத்தில் கடுமையான குளிர் நிலவுகிறது. மேலும் காற்று மாசுபாடும் பனிமூட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் மட்டுமல்லாமல் பகலிலும் கூட வாகனங்களை ஓட்டிச் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அதிகாலை நேரங்களில் சாலைகளே தெரியாத அளவுக்கு கடும் பனி மூட்டம் நிலவுவதால், விபத்துகள் ஏற்படுகின்றன. அதிகாலை நேரத்தில் வாகனங்களை ஓட்டிச்செல்வது சவாலாக இருப்பதாக தில்லி வாசிகள் அச்சத்துடன் கூறுகின்றனர். 

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு தில்லி சண்டிகர் நெடுஞ்சாலையில் அரியானா எல்லையான சிங்கு எல்லையில் அலிபுர் கிராமத்தில் பளு தூக்கும் வீரர்கள் சென்ற கார் ஒன்று, பனி மூட்டம் காரணமாக ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் காரின் மேல் பகுதி முழுவதும் சேதம் அடைந்தது. 

இந்த விபத்தில் பளு தூக்கும் வீரர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பளு தூக்கும் பிரிவில் உலக சாம்பியனான யாதவ் மற்றும் ரோஹித் இருவரும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். 

படுகாயம் அடைந்த இவர்கள் இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பளு தூக்கும் வீரர்கள் தில்லியில் இருந்து பானிபட்டுக்கு சென்று கொண்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. மேலும், அவர்கள் சென்ற காரில் பளு தூக்கும் உபகரணங்களும் இருந்துள்ளன.

இருந்தபோதும், இந்த விபத்து குறித்து கூறிய போலீஸார், அதிவேகமே விபத்துக்குக் காரணம் என்று கூறினர். மேலும், காருக்குள் சில பாட்டிகள் இருந்தன. எனவே, குடித்து விட்டு வாகனம் ஓட்டினரா என்பதையும் புறந்தள்ள முடியாது என்று கூறினர். 

இந்த விபத்தில் உயிரிழந்த நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். திகம்சந்த், சௌரப், யோகேஷ், ஹரீஷ் ராய் ஆகிய நால்வர் என்றும், இவர்களில் படுகாயங்களுடன் உயிர் தப்பிய யாதவ், வடக்கு தில்லியைச் சேர்ந்தவர் என்றும், இவர் சென்ற வருடம் மாஸ்கோவில் நடந்த உலக பளு தூக்குதல் பிரிவில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் பெற்றவர் என்றும் போலீஸார் கூறினர். 

சாக்‌ஷம் யாதவின் பயிற்சியாளர் சுனில் லோசப் இது குறித்துக் கூறியபோது, 2016ல் ஜூனியர் பிரிவில் தங்கமும், 2017ல் உலக சாம்பியன்ஷிப்பும் பெற்றவர் யாதவ். அவர் நேற்று என்னை போனில் அழைத்து, உங்கள் வீட்டுக்கு வருகிறோம் என்று சொல்லியிருந்தார். ஆனால் இன்று காலை இப்படி ஒரு விபத்துச் செய்தியைக் கேட்டேன் என்று கூறியுள்ளார்.