லடாக்கின் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீனப் படையினருக்கு இடையே கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தியாவின் பதில் தாக்குதலில் 43 சீன வீரர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தங்கள் தரப்பில் எவ்வளவு உயிர்ச் சேதம் ஏற்பட்டது என்பது பற்றி கமுக்கமாக இருந்தது. இதுபற்றி கேள்வி எழுப்பியும் சீனா வெளிப்படையாக பதில் அளிக்கவில்லை. 
இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் பலியான சீன வீரர்களின் கல்லறை புகைப்படம்  சமூக வலைதங்களில் வெளியாகி உள்ளது. இந்தப் புகைப்படத்தில் 35 கல்லறைகள் உள்ளன. இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை பற்றி சீன தரப்பு எதையும் உறுதி செய்யப்படவில்லை. கல்லறை கல்வெட்டில் ஜூன் 15 அன்று இறந்ததாகவும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே சீன ஆராய்ச்சியாளர் செங் கைபூ என்பவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், கல்வான் தாக்குதலில் சீன படையினர் 35 பேர் உயிரிழந்திருப்பதாகப் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த மோதலில் உயிரிழந்த சீன படை வீரர்களின் கல்லறை புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிவருகின்றன.