சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பிற்கு அந்நாட்டில் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளனர். 9,692 பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தாதய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளனர். இதனால், பல்வேறு பகுதியில் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள வுகான் நகரில் கல்வி பயிலும் வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரை அந்தந்த நாடுகள் விமானம் மூலம் சொந்த நாட்டிற்கு அழைத்துசெல்லும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக அந்நகரில் தங்கியிருந்த 206 ஜப்பானியர்களை அந்நாட்டு அரசு தனி விமானம் மூலம் சொந்த நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளது. அதேபோல் இந்தியாவும் தங்கள் நாட்டை சேர்ந்தவர்களை மீட்க தேவையான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியது. மேலும், வெளிநாடுகள் உள்ள தங்கள் நாட்டு மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இந்தநிலையில் சீனாவில் இருந்து 324 இந்தியர்கள் தற்போது இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவிய வுகான் மாகாணத்தில் இருந்து மீட்கப்பட்ட அவர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் தாயகம் திரும்பினர். அனைவரையும் டெல்லியில் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு முகாமில் வைத்து கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 14 நாட்கள் அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்ட பிறகே சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றனர்.

Also Read; இன்று தாக்கலாகிறது மத்திய பட்ஜெட்..! வரிச்சலுகைக்கு வாய்ப்பு..?