2.80 lakh people job ready - the central Government agility

மத்திய அரசு பணிகளுக்கு 2.80 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களில் சுமார் 2 லட்சம் பேர் மத்திய அரசின் பாதுகாப்பு, வருமானவரி மற்றும் சுங்கத்துறைகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மத்திய அரசு பணி

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தற்போது சுமார் 50 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை போதாததாக உள்ளது. பல துறைகளில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

இந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு ஊழியர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு ஊழியர்கள் தேர்வு நடைமுறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வருமானவரி

அதன்படி மத்திய அரசு பணிகளுக்கு 2.80 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களில் சுமார் 2 லட்சம் பேர் மத்திய அரசின் பாதுகாப்பு, வருமானவரி மற்றும் சுங்கத்துறைகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு சமீபத்தில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்ற அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

ஆனால் இந்த நடவடிக்கையை வருமான வரித்துறை ஊழியர்கள் பற்றாக்குறையால் திறம்பட செய்ய முடியவில்லை.

விண்வெளி ஆய்வு

தற்போது வருமான வரித்துறையில் சுமார் 46 ஆயிரம் ஊழியர்களே உள்ளனர். இந்த எண்ணிக்கை 80 ஆயிரமாக அதாவது இருமடங்காக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கூடுதல் ஊழியர்கள் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விண்வெளி ஆய்வு, வெளியுறவுத்துறை, தகவல் தொடர்பு அமைச்சகம் உள்பட மேலும் சில துறைகளிலும் பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.