25,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய நபர் வெளியிட்ட பகீர் தகவல்கள்
கேரளாவில் 25,000 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய நபர் மீண்டும் காவல்துறை ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளார். அவரை கொச்சி நீதிமன்றத்தில் போலீசார் நேற்று ஆஜர்படுத்திய நிலையில் அவரை 14 நாள் காவல்துறை கஸ்டடியில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகமும் (NCB) இந்திய கடற்படையும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர், இதன் விளைவாக 2,525 கிலோ மெத்தாம்பெட்டமைன் என்ற போதை பொருள் கைப்பற்றப்பட்டது.
பொதுவாக கிரிஸ்டல் மெத் எனப்படும் இந்த அதிக சக்தி வாய்ந்த போதை மருந்து, தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் மீதான அதன் தீங்கான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. ஹாஜி சலீம் தலைமையிலான பாகிஸ்தானை தளமாகக் கொண்ட மாஃபியாவுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்று NCB வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : கர்நாடக முதல்வர் யார்? காங்கிரஸின் திட்டம் இதுதான்.. இன்று வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தற்போது காவலில் உள்ள ஜுபைர் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட நபர், ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். ஜுபைர் ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் பாகிஸ்தானியர் அல்ல என்றும் கூறியுள்ளார். அவரின் இந்த வாக்குமூலம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால் அவரது கூற்றுக்களை சரிபார்க்க அவரது பின்னணியை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் முழுமையான அளவு இல்லை என்றும் ஜுபைர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் இருந்த சரக்கு கப்பலைஇந்தியக் கடற்படை பின்தொடர்ந்தபோது கடலில் வீசப்பட்ட 3,000 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்கள் கூடுதல் அளவு இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்த மிகப்பெரிய போதைப்பொருள் விவகாரத்தில் பல புதிர்களுக்கான விடையை கண்டறிய அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இதில் பல அமைப்புகள் மற்றும் சர்வதேச தாக்கம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : கர்நாடக வெற்றிக்கு பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றிய மம்தா.. காங்கிரஸின் ரியாக்ஷன் இதுதான்..
