சேகர் ரெட்டியின் காரில் ரூ.24 கோடிக்கு 2000 ரூபாய் நோட்டுகள் சிக்கியது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரிக்கின்றனர்.
தமிழகத்தில் மணல் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிரபல கனிமவள தனியார் நிறுவனம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், அந்த நிறுவனத்தினர் பல கோடி ரூபாய்களை பதுக்கி வைத்திருப்பதாகவும், வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் உரிமையாளரான சேகர் ரெட்டியின் வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னையில் தியாகராய நகர் யோகாம்பாள் சாலையில் சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த 2 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதேபோல், விஜயராகவா சாலையில் உள்ள அவரது சகோதரர் சீனிவாச ரெட்டியின் வீடு, முகப்பேரில் உள்ள நண்பர் பிரேம் வீடு ஆகிய 2 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஆந்திரா கிளப், தி.நகரில் உள்ள சேகர் ரெட்டியின் நிறுவனம், வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள சேகர் ரெட்டியின் வீடு உள்பட 8 இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.127 கோடி, 150 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்த விசாரணை அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இன்று காலை வேலூர் மாவட்ட போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பாது, அவ்வழியாக வந்த சேகர் ரெட்டியின் காரை சோதனை செய்தபோது, அதில் ரூ.24 கோடி புதிய 2000 நோட்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது, ரூ.24 கோடியும் வங்கிகளில் இருந்து எடுக்கப்பட்ட புதிய 2000 நோட்டுகள் ஆகும். சேகர் ரெட்டியின் சொந்த கிராமமான தொண்டான் துளசி பகுதிக்கு கொண்டு சென்றனர் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
