ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் வெளிநாட்டினர் இருவர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு சுற்றுலா பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Pahalgam attack Tamil Nadu tourists : ஜம்மு காஷ்மீர் இயற்கை கொஞ்சும் அழகு மிகுந்த பகுதி, இந்த பகுதியில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த தீவிரவாத வன்முறை கடந்த சில ஆண்டுகளாக குறைந்திருந்தது. இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் வெண் பனி போர்த்திய மலையை பார்க்க ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் சுற்றுலா செல்கின்றனர். அந்த வகையில் புல்வெளிகள் மற்றும் ஏரிகள் நிறைந்த பகுதி தான் பஹல்காம், சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது. நேற்றும் இயற்கையான அழகிய பகுதியை சுற்றிப்பார்க்க சுற்றுலா பயணிகள் சென்றிருந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: காஷ்மீரில் இன்று முழு அடைப்பு போராட்டம்

பயங்கரவாதிகள் தாக்குதல்
கண் மூடித்தனமாக சுட்டதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதல் பஹல்காமில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலை உச்சியில் உள்ள புல்வெளியான பைசரனில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு டெல்லி போலீசார் நகரம் முழுவதும் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். இதனிடையே ராணுவத்தினரின் தேடுதல் வேட்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
2000 முதல் 2025 வரை: காஷ்மீரில் பொதுமக்களை குறிவைக்கும் பயங்கரவாதத் தாக்குதல்கள்

தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
இந்த தாக்குதலில் வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. மேலும் ஏராளமானோர் காயம் அடைந்தும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில், டாக்டர் பரமேஸ்வரம் மற்றும் 83 வயதுடைய சந்துரு ஆகியோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழர்கள் காயம்
மேலும் பாலச்சந்திரா என்பவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தீவிரவாதிகள் தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் ஶ்ரீநகரில் உள்ள அனந்த்நாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே பஹல்காம் தாக்குதலில் மதுரைச் சேர்ந்த சந்துரு பாதிக்கப்படவில்லை என மனைவி விளக்கம் அளித்துள்ளார். மாரடைப்பு ஏற்பட்டதால் சந்துரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தீவிரவாத தாக்குதலால் அல்ல எனவும் தெரிவித்துள்ளார். எனவே தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேர் மட்டுமே தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகார்கள் கூறியுள்ளனர்.
