குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் 15 எம்.பி.க்கள் போட்ட வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்த நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயக‌ கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட இரு அவைகளையும் சேர்ந்த எம்.பி.க்கள் வாக்களித்தனர். 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் மொத்தம் 767 வாக்குகள் பதிவாகி இருந்தன.

சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி

இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி பி.சி. மோடி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் 15 எம்.பி.க்கள் போட்ட வாக்குகள் செல்லாது என்று தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார்.

15 எம்.பி.க்கள் போட்ட வாக்குகள் செல்லாது

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியும், எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியும் தேர்தலை எதிர்கொள்ள ரெடியாகி வந்தன. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எப்படி வாக்களிக்க வேண்டும் என இந்த இரண்டு கூட்டணிகளை சேர்ந்த எம்.பி.க்களுக்கும் பயிற்சி அமர்வுகளும் நடந்தது. அதில் வாக்களிக்கும் நடைமுறை என்ன? எப்படி வாக்களிக்க வேண்டும்? என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

வாக்களிப்படி எப்படி? பயிற்சி எடுத்த எம்.பி.க்கள்

இப்படி பயிற்சி கொடுக்கப்பட்டும் 15 எம்.பி.க்கள் செல்லாத வாக்குகளை பதிவு செய்தது பொதுமக்களிடையே நகைப்பை ஏற்படுடுத்தியுள்ளது. மக்கள் தேர்வு செய்யப்பட்டு, மக்கள் பிரச்சனைகளை பேச எம்.பி.க்கள் நாடாளுமன்றம் செல்கின்றனர். அங்கு புள்ளி விவரங்களுடன் மக்கள் பிரச்சனைகளை முன்வைக்கின்றனர். பெரும்பாலான எம்.பி.க்கள் நன்கு படித்தவர்கள். அப்படி இருக்கும்போது அவர்களை தங்கள் வாக்குகளை தவறாக பதிவு செய்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.