இந்தியாவில் ஆளுநராக இருந்து குடியரசு துணைத் தலைவரானது யார் யார் என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக மூத்த தலைவரும், மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். காலை 10 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாலை 5 மணிக்கு வாக்குபதிவு முடிவடையும். அதன்பிறகு வெற்றி பெற்றவரின் விவரம் வெளியிடப்படும்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மைக்கு தேவையான உறுப்பினர்கள் இருப்பதால் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. சி.பி.ராதாகிருஷ்ணன் ஆளுநராக இருந்து குடியரசு துணைத் தலைவராக உயர்ந்துள்ளார். இவர் மட்டுமல்ல; இதற்கு முன்னதாக பலர் ஆளுநராக இருந்து குடியரசு துணைத் தலைவர்களாகியுள்ளனர். இது குறித்து விரிவாக பார்ப்போம்.
டாக்டர் ஜாகிர் உசேன்
டாக்டர் ஜாகிர் உசேன் 1962 இல் குடியரசு துணைத் தலைவராக இருந்தார். இதற்கு முன்பு பீகார் ஆளுநராக 1957 முதல் 1962 வரை பணியாற்றினார். பின்னர் 1967ல் டாக்டர் ஜாகிர் உசேன் குடியரசுத் தலைவரானது குறிப்பிடத்தக்கது. வராககிரி வெங்கட கிரி 1967 ல் குடியரசு துணைத் தலைவராக இருந்தார். அதற்கு முன்பு அவர் உத்தரப் பிரதேசம் (1957 முதல் 1960 வரை), கேரளா (1960 முதல் 1965 வரை ) மற்றும் மைசூர் (1965 முதல் 1967 வரை ) உள்ளிட்ட பல மாநிலங்களின் ஆளுநராக இருந்தார். பின்பு 1969ல் இந்தியாவின் குடியரசுத் தலைவரானார்.
ஆளுநராக இருந்து குடியரசு துணைத் தலைவராக உயர்வு
கோபால் ஸ்வரூப் பதக், மைசூரின் முன்னாள் ஆளுநராக (1967 முதல் 1968 வரை) இருந்து 1969ல் குடியரசு துணைத் தலைவரானார். அவர் 1966 முதல் 1967 வரை சட்டம் மற்றும் நீதி அமைச்சராகவும் இருந்தார். பசப்பா தனப்பா ஜாட்டி 1974ல் குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு ஒடிசாவின் (1972 முதல் 1974 வரை) ஆளுநராகப் பதவி வகித்தார். ஜாட்டி 1968 முதல் 1972 வரை புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகவும் இருந்தார்.
சங்கர் தயாள் சர்மா
சங்கர் தயாள் சர்மா ஆந்திரப் பிரதேசம் (1984 முதல் 1985), பஞ்சாப் (1985 முதல் 1986) மற்றும் மகாராஷ்டிரா (1986 முதல் 1987) உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆளுநராகப் பணியாற்றினார். 1952 முதல் 1956 வரை போபால் மாநிலத்தின் முதலமைச்சராகவும் இருந்தார். தொடர்ந்து 1987 முதல் 1992 வரை குடியரசு துணைத் தலைவராகப் பணியாற்றினார். 1992ல் குடியரசுத் தலைவரானார்.
ஜெகதீப் தன்கரும் ஆளுநர் தான்
கிருஷ்ணன் காந்த் 1997ல் குடியரசு துணைத் தலைவராவதற்கு முன்பு ஆந்திரப் பிரதேசத்தின் ஆளுநராக (1990 முதல் 1997 வரை) இருந்தார். கடைசியாக குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் அதற்கு முன்பு மேற்கு வங்கத்தின் ஆளுநராகப் (2019 முதல் 2022 வரை) பணியாற்றினார். இவர் ராஜினாமா செய்ததால் இப்போது குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
