இந்துஜா குழுமத்தின் துணை நிறுவனமான அசோக் லேலண்ட் வர்த்தக வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. மக்கள் செலவிடுவது குறைந்தது, பொருளாதார மந்தநிலை போன்ற காரணங்களால் கடந்த பல மாதங்களாக உள்நாட்டில் வாகன விற்பனை படுத்து விட்டது. விற்பனை அதிகரிக்க சலுகைகளை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அள்ளி கொடுத்த போதும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் கையிருப்பு அதிகரிக்க தொடங்கியது. இதனையடுத்து உற்பத்தி அளவை குறைக்க தொடங்கின. அதேசமயம் விற்பனையில் முன்னேற்றம் ஏற்படாததால் தொடர்ந்து கையிருப்பு அதிகரிக்க தொடங்கியது. கடைசியில் வேறுவழியின்றி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது ஆலைகளில் வேலையில்லா நாட்களை அறிவிக்க தொடங்கின.

தற்போது அசோக் லேலண்ட் நிறுவனம் தனது சில ஆலைகளில் 2 முதல் 12 நாட்கள் வேலையில்லா நாட்களை கடைப்பிடிக்க உள்ளதாக பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

அதில், சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, உற்பத்தியை சீரமைக்கும் நோக்கில் 2019 டிசம்பர் மாதம் எங்களது சில ஆலைகளில் 2 முதல் 12 நாட்கள் வரை வேலையில்லா நாட்களை கடைப்பிடிக்க உள்ளோம் என தெரிவித்துள்ளது.